பெங்களூரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இரண்டு இண்டிகோ விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாக இருந்தன. ஆனால், ரேடார் கன்ட்ரோலர் கருவியின் சமிக்கையால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஆபத்தைச் சரிசெய்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று விமானப் போக்குவரத்து ரெகுலர் டி.ஜி.சி.ஏ தெரிவித்துள்ளது.
பெங்களூரு விமான நிலையத்துக்கு வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. ஓடுபாதை செயல்பாடுகளுக்கான ஷிப்ஃட் பொறுப்பாளர், விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் வடக்கு ஓடுபாதையைப் பயன்படுத்த முடிவு செய்ததாக தெரிகிறது. அதனால் தெற்கு ஓடுபாதைமூடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அது தெற்கு கோபுர கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்கப்படவில்லை. பெங்களூரிலிருந்து கொல்கத்தா செல்லும் விமானத்துக்கும், பெங்களூரிலிருந்து புவனேஸ்வர் செல்லும் விமானத்துக்கும் ஒரே நேரத்தில் இரண்டு கட்டுப்பாட்டாளர்களும் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஆனால், ஒரே திசையில் ஒரே நேரத்தில் இரண்டு விமானங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என டிஜிசிஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு விமானங்களும் ஒரே நேரத்தில் ஒரே திசையில் உயர பறக்கும்போது நடுவானில் மோதிக்கொள்ளும் அபாயம் இருந்தது. ரேடார் கருவியின் கட்டுப்பாட்டால் ஒரு விமானத்தின் திசை திருப்பப்பட்டுக் இந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள், "கவனக்குறைவாகச் செயல்பட்ட கோபுர கண்காணிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு - கொல்கத்தா விமானத்தில் 176 பயணிகள், 6 பணியாளர்களும், பெங்களூரு - புவனேஸ்வர் விமானத்தில் 238 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 426 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
