Published:Updated:

`எந்தத் தந்தையாவது மகனின் இறுதிச் சடங்குக்குப் போகாமல் இருக்க முடியுமா?’ - வேதனை பகிரும் ராம்புகார்

தொழிலாளர் ராம்புகார்
தொழிலாளர் ராம்புகார் ( Twitter / Atul Yadav )

``பணக்காரர்களுக்கு எல்லா உதவிகளும் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து அவர்களை அழைத்து வர விமானங்கள் கொண்டு வரப்படும். ஆனால், எங்களைப் போன்ற ஏழைத் தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாமல் கைவிடுகின்றனர்.”

இந்தியாவில், நாள்கள் செல்லச் செல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னும் கவலைக்குரிய வகையில் சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுபவிக்கும் துயரங்கள் சார்ந்த செய்திகளும் புகைப்படங்களும் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. அவ்வகையில் சில நாள்களுக்கு முன்பு, சாலையின் ஓரத்தில் அமர்ந்து செல்போனில் அழுதுகொண்டே பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவரின் புகைப்படம், நாட்டின் அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கவலைகளையும் விளக்கும் ஒரு `ரெப்ரசன்டேஷன் இமேஜ்’ ஆக இருந்தது எனலாம்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
Twitter / Atul Yadav

ராம்புகாரின் இந்தப் புகைப்படத்தை பி.டி.ஐ புகைப்படக் கலைஞரான அதுல் யாதவ் என்பவர் எடுத்திருந்தார். இந்தப் புகைப்படத்தை எடுத்தது தொடர்பான தனது அனுபவத்தையும் ஃபர்ஸ்ட் போஸ்ட் ஊடகத்திடம் பகிர்ந்திருந்தார்.

அதில், ``டெல்லியில் நிஜாமுதீன் வழியாக சென்றுகொண்டிருக்கும்போது யமுனா பாலத்தின் அருகே சாலை ஓரத்தில் ராம்புகார் மிகவும் சங்கடமான நிலையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அவர் அருகில் சென்று அவருடன் பேசும் முன்பு அவரின் அந்த நிலையைப் புகைப்படமாகப் பதிவு செய்தேன். பின்னர் அவருடன் பேசும்போது, தன் மகன் இறந்துவிட்டதாகக் கூறினார். நான் அவரிடம் எங்கு செல்ல வேண்டும் எனக் கேட்டேன். யமுனா பாலத்திலிருந்து பொதுவான திசையைக் குறிப்பிட்டு அங்கு செல்ல வேண்டும் என்று பலமுறை கூறினார். அந்தச் சூழலில் அவரால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவரை பத்திரமாக அனுப்பி வைப்பதாகக் கூறினர்” என்றார்.

`மகன் இறந்துவிட்டதாகக் கூறினார்!’ -புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் புகைப்படம் எடுத்தவரின் கள அனுபவம்

டெல்லியில் கட்டடத் தொழிலாளராகப் பணியாற்றி வரும் ராம்புகார், பீகார் மாநிலத்தில் உள்ள பெகுசாரி எனும் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். ஊரடங்கால் ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்த இவரிடம், மகன் இறந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மகன் இறந்த நிலையில்கூட ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்த ராம்புகார் செய்வது அறியாது சாலை ஓரத்தில் இருந்து அழுதுகொண்டிருக்கும்போது பதிவு செய்யப்பட்ட புகைப்படம்தான் அது.

இந்நிலையில், தற்போது ராம்புகார் தனது சொந்த மாநிலமான பீகாருக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன் மகனை இறப்பதற்கு முன்பு பார்க்க முடியாமல் போன சங்கடமான சூழல் பற்றியும் தனது எதிர்கால நிலைமைப் பற்றியும் பி.டி.ஐ நிறுவனத்திடம் ராம்புகார் பேசியுள்ளார்.

தனிமைப்படுத்தல் முகாம்
தனிமைப்படுத்தல் முகாம்
மாதிரிப் படம்

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான முகாமில் இருக்கும் ராம் பேசுகையில், ``நாங்கள் தொழிலாளர்கள். எங்களுக்கு வாழ்க்கை என்பதே கிடையாது. வாழ்க்கையைவிட்டுச் செல்லும்வரை சக்கரத்தில் மாட்டிக்கொண்ட கயிறுபோல சுழன்றுகொண்டே இருக்க வேண்டும். 1 வயதுகூட ஆகாத என்னுடைய மகன் இறந்துவிட்டான். அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மின்னல் தாக்கியதுபோல இருந்தது. என்னை வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கும்படி காவலர்களிடம் கெஞ்சினேன். ஆனால், அவர்கள் யாரும் உதவி செய்யவில்லை. அதில் ஒரு காவலர், `நீ வீட்டுக்கு திரும்பிச் சென்றால் உன்னுடைய மகன் உயிரோடு வந்துவிடுவானா? இது ஊரடங்கு. உன்னால் எங்கும் செல்ல முடியாது’ என்று என்னிடம் கூறினார்” எனத் தன் கவலைக்குரிய நிலைமையை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

`நின்றுகொண்டே லாரியில் பயணம்; நண்பனின் மடியில் பிரிந்த உயிர்!’ - லாக் டெளன் சோகம்

யாதவின் பெயர் தெரியாத ராம்புகார் அவரைக் குறிப்பிட்டு, ``ஒரு புகைப்படக்காரர் மற்றும் ஒரு பெண் எனக்கு உதவி செய்வதாகக் கூறினர்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ``சாலை ஓரத்தில் அமர்ந்து வீட்டுக்குச் செல்வதற்கான வழிகளைக் குறித்து ஆலோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு பத்திரிகையாளர் என்னிடம் வந்து `ஏன் களைப்பாகவும் கவலையுடனும் இருக்குறீர்கள்?’ என்று கேட்டார். அவரின் காரில் அழைத்துச் செல்வதாகவும் கூறினார். ஆனால், காவலர்கள் அனுமதிக்கவில்லை. அந்தப் பெண் உணவுக்காக எனக்கு 5,500 ரூபாய் வழங்கினார். சிறப்பு ரயிலுக்கான எனது டிக்கெட்டையும் பதிவு செய்தார். அப்படித்தான் நான் இங்கு வர முடிந்தது” என்று கூறியுள்ளார்.

நாங்களே எங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். எங்களுடைய வாழ்க்கையின் மதிப்பு இவ்வளவுதான். எந்த நாட்டையும் சேராத தொழிலாளர்கள் நாங்கள்.
ராம்புகார்

``பணக்காரர்களுக்கு எல்லா உதவிகளும் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து அவர்களை அழைத்துவர விமானங்கள் கொண்டு வரப்படும். ஆனால், எங்களைப் போன்ற ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாமல் கைவிடுகின்றனர்.

நாங்களே எங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். எங்களுடைய வாழ்க்கையின் மதிப்பு இவ்வளவுதான். எந்த நாட்டையும் சேராத தொழிலாளர்கள் நாங்கள். என்னுடைய பெயரில் உள்ள ராம் என்ற பெயரையும் இணைத்து என் மகனுக்கு ராம்பிரவேஷ் எனப் பெயர் வைத்தேன். ஆனால், எந்தத் தந்தையாவது தன் மகனின் இறுதிச் சடங்குக்குப் போகாமல் இருக்க முடியுமா? தனது குடும்பத்துடன் இணைந்து துக்கத்தைக்கூட பகிர விரும்பாமல் இருக்க முடியுமா? ஆனால், இன்னும் எனது குடும்பத்தை நான் சந்திக்கவில்லை” என்று மனதை உலுக்கும் கேள்விகளை எழுப்பினார்.

குழந்தை
குழந்தை
மாதிரிப் படம்

மேலும், ``நான் இரண்டு நாள்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து பெகுசாரை வந்தடைந்தேன். அங்கிருந்து பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே ஒரு இரவு தங்க வைக்கப்பட்டேன். பின்னர், அங்கிருந்து பேருந்தின் மூலம் நகரத்துக்கு வெளியே உள்ள பள்ளி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். தொடர்ந்து அங்கேயே இருக்கிறேன். எப்போது என்னுடைய குடும்பத்துடன் இணையப்போகிறேன் என்பது தெரியவில்லை. உடல்நிலை சரியில்லாத என் மனைவியும் மூன்று மகள்களும் எனக்காகக் காத்திருக்கின்றனர்” என்று மகனை இழந்த துக்கத்தோடும் குடும்பத்தினரை எப்போது சந்திப்போம் என்ற ஏக்கத்தோடும் முகாமில் காத்திருக்கிறார் ராம்புகார்.

`எங்களின் துயரங்களைப் பற்றி யாரும் பேச வேண்டாம்' - கொதிக்கும் புலம்பெயர்ந்த பணியாளர்கள்
அடுத்த கட்டுரைக்கு