Published:Updated:

ஓசி சைக்கிள்.. இரவில் பயணம்! -கேரளா டு கொல்கத்தா பயணமான கட்டுமானத் தொழிலாளி

சைக்கிள்
சைக்கிள்

கட்டுமானப் பணி செய்வதற்காக கொல்கத்தாவிலிருந்து கேரளாவுக்கு வந்திருந்த தொழிலாளிக்கு ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இல்லாமல் போய்விட்டது. அதனால் இரவல் சைக்கிளில் கொல்கத்தா பயணமானார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவதைத் தடுக்கும் வகையில் நாடுமுழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் செர்பு என்ற கிராமத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிலர் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இல்லாததால் அவர்கள் அனைவரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

`4 தண்ணீர் பாட்டில்கள்; 370 கி.மீ நடைப்பயணம்’ –  பெங்களூரிலிருந்து கிளம்பிய தொழிலாளர் குடும்பம்

மேற்கு வங்கத்திலிருந்து மாஃபிபுல் என்ற 20 வது இளைஞரும் அவரது சகோதரரும் கட்டுமானப் பணி செய்வதற்காகக் கேரளா வந்திருந்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாகக் கட்டுமான வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் இருவருக்கும் வேலை எதுவும் கிடைக்கவில்லை. 

கட்டுமானப் பணி
கட்டுமானப் பணி

வேலை இல்லாததால் மாஃபிபுல், தன் சகோதரருடன் சேர்ந்து நெல் வயலில் வேலை செய்தார். ஆனால், அந்த வேலையும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் இருவரும் உணவுக்குத் திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடன் தங்கியிருந்து மேலும் சில தொழிலாளர்களும் உணவுக்குச் சிரமப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த 9-ம் தேதி மாஃபிபுல், தான் தங்கியிருந்த கிராமத்தைச் சேர்ந்த மலையாளி ஒருவரிடம் சைக்கிள் கேட்டிருக்கிறார். சிறிது நேரத்தில் கொடுத்துவிடுவதாகச் சொன்னதால் அந்த நபர் சைக்கிளைத் தந்து உதவியுள்ளார். ஆனால் மாஃபிபுல் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரவு நேரத்தில் அந்த சைக்கிளிலேயே கொல்கத்தாவுக்குப் பயணமாகிவிட்டார். மாஃபிபுல் சகோதரருக்குக் கூட அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பது தெரியாததால் தவித்துள்ளார். 

கொச்சி டு தென்காசி நடைப்பயணம்! - பாதி வழியில் மயங்கிய தமிழக இளைஞர்கள்! #CoronaLockdown

சைக்கிள் இரவல் கொடுத்தவரும் அதைக் கேட்டு நச்சரித்துள்ளார். இந்த நிலையில், தன் சகோதரரை தொலைபேசியில் தொடர்புகொண்ட மாஃபிபுல், சைக்கிளில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் அந்த வழியாகக் காய்கறி ஏற்றிச் செல்லும் லாரிகளில் சைக்கிளுடன் பயணம் செய்து ஹைதராபாத் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தன் சகோதரர் ஹைதராபாத் சென்றடைந்ததை உறுதி செய்த நிலையில், சைக்கிளை ஓசிக்குக் கொடுத்தவர் அதைக் கேட்டு மீண்டும் வந்திருக்கிறார். சைக்கிள்காரருக்கு 7000 ரூபாய் பணத்தை மாஃபிபுல் சகோதரர் கொடுத்துள்ளார். 

representational image
representational image

மாஃபிபுல் பயணம் பற்றி அறிந்த அங்கிருந்த மேலும் 12 கொல்கத்தா தொழிலாளர்களும் புறப்பட்டுச் செல்ல முடிவு செய்திருக்கிறார்கள். இது பற்றி அறிந்த கேரள போலீஸார் அவர்களுக்கு ஆலோசனை கொடுத்ததைத் தொடர்ந்து தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு