Published:Updated:

`எங்களின் துயரங்களைப் பற்றி யாரும் பேச வேண்டாம்' - கொதிக்கும் புலம்பெயர்ந்த பணியாளர்கள்

வெளி மாநிலத் தொழிலாளர்கள்
வெளி மாநிலத் தொழிலாளர்கள்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தைவிட வெளிமாநிலத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள்தான் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

சென்னை, மும்பை போன்ற பெருநகரங்களில் வெளிமாநிலப் பணியாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் தங்கியிருந்தனர். கட்டட வேலைகள், உணவுக்கூடங்களில் பணியாற்றிய அவர்களுக்கு கொரோனா, வாழ்க்கையின் துயரமான தருணங்களைக் காட்டியுள்ளது.

வேலைவாய்ப்புகளுக்காக வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் பெரும்பாலும் தினக்கூலிப் பணியாளர்களே. கொரோனா நோய்த்தொற்றால் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஊதியம் இல்லாத சூழல் உருவானது. வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அரசு சில சலுகைகளை வழங்கினாலும், அது போதுமானதாக இல்லாததால் அவரவர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கினர்.

வெளிமாநில தொழிலாளர்கள்
வெளிமாநில தொழிலாளர்கள்

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டதால் வேறுவழியில்லாமல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் நடந்தே சென்றனர். இதனால் விபத்து, பசி போன்ற காரணங்களால் நிறைய மரணங்கள் நிகழத்தொடங்கின. ஆனாலும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வது குறையவில்லை. இப்போதைக்கு இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தைவிட வெளிமாநிலத் தொழிலாளிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள்தான் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. குழந்தைகளுடன் நடந்தே பயணிக்கும் வெளி மாநிலத்தவரின் வீடியோக்களும், புகைப்படங்களும் தினமும் சமூகவலைதளங்களில் வெளியாகி மனதைப் பதறச் செய்கிறது.

வேறு வழியில்லாமல் அரசு, ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலத்துக்கு பணியாளர்கள் செல்ல சிறப்பு ரயில்களை இயக்கியது. அப்படி, மும்பையிலிருந்து, உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற நகரங்களுக்கு கிளம்பிய `சராமிக்' சிறப்பு ரயிலில் பயணிக்க ஆயிரக்கணக்கான வெளிமாநிலப் பணியாளர்கள் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கூடினர்.

ஊர்களுக்குச் செல்ல பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த அவர்களில் முதியவர் ஒருவர் பேசுகையில், ``ஐந்து லட்சம் பேருக்கு மேலான வெளிமாநிலப் பணியாளர்கள் மும்பையில் இருந்தோம். எங்கள் மாநிலத்தில் வேலை கிடைக்காத சூழலில்தான் இங்கு வந்தோம். அந்த மாநிலத்தவர்களுக்கு கொடுப்பதைவிடக் குறைவான கூலிகள்தான் எங்களுக்குக் கொடுப்பார்கள். ஆனால், எங்கள் மாநிலத்தில் கிடைத்த கூலியைவிட அதிகமாக இருந்ததால் இங்கு தங்கி வேலை பார்த்தோம்.

வெளி மாநில பணியாளர்கள்
வெளி மாநில பணியாளர்கள்

வெளிமாநிலப் பணியாளர்கள் யாரும் ஊரடங்கு அறிவித்த உடன் தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல ஆரம்பிக்கவில்லை. அரசு எங்களுக்காக எதாவது உதவி செய்யும் என்று காத்திருந்தோம். ஆனால், எந்த உதவிகளும் கிடைக்கல. வேலை இல்ல. ஊரடங்கு அறிவித்த ஆரம்ப நாள்களில் இரண்டு நேர உணவு கிடைத்தது. நாள்கள் செல்லச் செல்ல ஒரு நேர சாப்பாட்டுக்கே போராடிட்டு இருக்கோம். அதனால்தான் மக்கள் நடந்தே போறாங்க.

அவங்களுக்கு உணவு உட்பட எந்த வசதியும் அரசு செய்து கொடுக்கல. இனியும் இங்கே இருந்தால் எங்க உயிர் போவதையும் அரசு பார்த்துக்கொண்டுதான் இருக்கும். நிச்சயமாக, இனி எங்கள் மாநிலத்தை விட்டு வெளியே வேறு வேலைகளுக்கு வரமாட்டோம். இத்தனை நாள் நாங்கள் வேலை பார்த்த நிறுவனங்கள், எங்களை தங்களின் சகோதராக அல்ல, மனிதராகக்கூட மதிக்கவில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். எங்கள் பசிக்குப் பதில் சொல்லாத யாரும் எங்களின் துயரங்களைப் பற்றி பேச வேண்டாம்" என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் என்ன செய்தார்கள் என்பதை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு