Published:Updated:

`தற்பெருமை ஓகே; ஆனால், அந்த அர்த்தம் மிகவும் கேவலம்!' - சர்ச்சையில் நடிகர் மிலிந்த் சோமன் விளம்பரம்

சர்ச்சை விளம்பரம்

அந்த வீடியோவின் கமென்ட் பாக்ஸ் மூடப்பட்டது. `இது ஒரு ஜோக்' என சர்ச்சை வீடியோ குறித்து, தயாரிப்பு நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டது. பிறகு, ஆண்களுக்காக ஒரு பதிவு ஒன்றையும் அந்த நிறுவனம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.

`தற்பெருமை ஓகே; ஆனால், அந்த அர்த்தம் மிகவும் கேவலம்!' - சர்ச்சையில் நடிகர் மிலிந்த் சோமன் விளம்பரம்

அந்த வீடியோவின் கமென்ட் பாக்ஸ் மூடப்பட்டது. `இது ஒரு ஜோக்' என சர்ச்சை வீடியோ குறித்து, தயாரிப்பு நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டது. பிறகு, ஆண்களுக்காக ஒரு பதிவு ஒன்றையும் அந்த நிறுவனம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.

Published:Updated:
சர்ச்சை விளம்பரம்

வைரலாகும் விஷயத்தை விளம்பரங்களுக்கான கன்டென்ட்டாக மாற்றுவார்கள். ஆனால், பிரபல டிஷ்வாஷ் லிக்விட் நிறுவனத்தின் விளம்பரம், சர்ச்சையாகி வைரலாகியுள்ளது.

உடற்பயிற்சிக்கூடத்தில் அந்தக் காட்சி நடப்பதாக இருக்கும். `இன்று நான் சோர்வாக இருப்பதாக உணர்கிறேன். நேற்று இரவு வீட்டில் எல்லாப் பாத்திரங்களையும் நான்தான் சுத்தம் செய்தேன்' என்று தன்னுடன் உடற்பயிற்சி செய்யும் பெண் ஒருவரிடம் ஓர் இளைஞர் தற்பெருமையாகச் சொல்லிக்கொண்டிருப்பார்.

சர்ச்சை விளம்பரம்
சர்ச்சை விளம்பரம்

உடனே, பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், அந்த இளைஞரைப் புகழ்பாடுவதுடன், ஆண்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கறுப்பு நிறத்திலான புதிய டிஷ்வாஷ் லிக்விட் குறித்து அந்த இளைஞருக்கு விவரிப்பார். `இந்தப் புதிய தயாரிப்பைப் பயன்படுத்தி, காலை, மாலை, இரவு என எல்லா நேரமும் பாத்திரம் சுத்தம் செய்யும் பணியைச் சுலபமாகச் செய்யலாம்; அதிகமாகப் பெருமிதப்படலாம்' என்பார்.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்தப் புதிய விளம்பரம் நேற்றுதான் யூடியூபில் வெளியானது. அடுத்த சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட இந்த விளம்பரத்தால், புதிய சர்ச்சையும் வெடித்தது. இதில், பாலியல் ரீதியான ஆபாசமான கருத்து மறைமுகமாக உணர்த்தப்படுவதாகப் பலரும் சமூக வலைதளங்களில் கொதிக்க ஆரம்பித்தனர். விளம்பரத்தைத் தயாரித்த நிறுவனத்துடன், விளம்பரத்தில் நடித்த மிலிந்த் சோமனும் விமர்சனத்துக்கு ஆளானார்.

சர்ச்சை விளம்பரம்
சர்ச்சை விளம்பரம்

இதைத் தொடர்ந்து, அந்த வீடியோவின் கமென்ட் பாக்ஸ் மூடப்பட்டது. `இது ஒரு ஜோக்' என சர்ச்சை வீடியோ குறித்துத் தயாரிப்பு நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டது. பிறகு, ஆண்களுக்காக பதிவு ஒன்றையும் அந்த நிறுவனம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.

``கறுப்பு நிறத்திலான விம் பிளாக் பாட்டிலை பற்றி நீங்கள் தற்பெருமைப் பேசுவதை நாங்கள் அறிகிறோம். ஆனால், ஒரு சிறு விவரத்தை உங்களுக்குச் சொல்ல மறந்துவிட்டோம். பாட்டில் மட்டும் வேறு, உள்ளே இருக்கும் திரவம் எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. பாத்திரங்களைக் கழுவுவது அனைவருக்கும் ஒன்றுதான். அதனால், திரவமும் ஒரே மாதிரியாக இருக்கும். சமையலறைக்குள் செல்ல உங்களுக்குப் புதிய பாட்டில் தேவையில்லை. இவையும் உங்கள் வேலையே என்பதை உணருங்கள். இந்தப் புதிய பிரசாரத்தால் எந்த ஆண்களும் பாதிக்கப்படவில்லை" என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் பதிவு
ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் பதிவு

மக்களின் கோபத்துக்கு, உரிய விளக்கம் சொல்லாமல், செய்த தவற்றை ஜோக் என சொல்வதும், சப்பைக்கட்டு அறிக்கை வெளியிடுவதும் சரியான அணுகுமுறை இல்லை எனவும் பேச்சுகள் எழுந்துள்ளன. வீட்டு வேலையில் பாலினம் பார்க்கப் படக்கூடாது என்பதுதான் நடுநிலை. அந்தக் கருத்தை வெளிப்படுத்தச் சரியான முறையில் விளம்பரம் தயாரிக்கலாமே தவிர, அருவருக்கத்தக்க வகையில் ஆணாதிக்கம் மற்றும் மோசமான எண்ண ஓட்டத்தின் வெளிப்பாடாக இதுபோன்று விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்பதுதான் எல்லோரின் பொதுவான கருத்தாக இருக்கும்.