Published:Updated:

`தலைமை ஆசிரியர் இல்லாததால் ஊர் சுற்றுகிறோம்' - கேரள முதல்வரை கிண்டலடித்த அமைச்சர்!

அனைத்து அமைச்சர்களும் வாரத்தின் ஐந்து நாள்களும் அலுவலகத்தில் இருக்க வேண்டும். திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் அமர்ந்து, அமைச்சர் அலுவலகப் பணிகளைத் துரிதமாக முடிக்க வேண்டும்.

பினராயி விஜயன் வெளிநாட்டு சுற்றுப்பயணம்
பினராயி விஜயன் வெளிநாட்டு சுற்றுப்பயணம்

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அரசுமுறைப் பயணமாக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் தலைமை ஆசிரியர் இல்லாததால் ஆசிரியர்களான நாங்கள் ஊர் சுற்றுகிறோம் என்று அம்மாநில அமைச்சர் கே.ராஜு கிண்டலாகத் தெரிவித்திருக்கிறார்.

பினராயி விஜயன் வெளிநாட்டு சுற்றுப்பயணம்
பினராயி விஜயன் வெளிநாட்டு சுற்றுப்பயணம்

கேரள மாநில முதல்வராக பினராயி விஜயன் பொறுப்பேற்றதும் அமைச்சர்களின் சுற்றுப்பயணத்துக்குக் கடிவாளமிட்டார். அனைத்து அமைச்சர்களும் வாரத்தின் ஐந்து நாள்களும் அலுவலகத்தில் இருக்க வேண்டும். திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் அமர்ந்து, அமைச்சர் அலுவலகப் பணிகளைத் துரிதமாக முடிக்க வேண்டும். மற்ற இரண்டு நாள்களில் நீங்கள் வேறு பணிகளைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று கண்டிப்புடன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் பினராயி விஜயன், தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், போக்குவரத்துத்துறை அமைச்சர் சசீந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் ஜப்பான், தென் கொரிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாகக் கடந்த வாரம் சென்றனர்.

அமைச்சர் கே.ராஜூ
அமைச்சர் கே.ராஜூ

இதற்கிடையில் கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கே.ராஜு கண்ணூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், "வாரத்தின் ஐந்து நாள்கள் தலைமைச் செயலகத்தில் இருக்க வேண்டும் என உத்தரவிட்ட முதலமைச்சர் வெளிநாட்டுக்குப் போயிருப்பதால் அமைச்சர்கள் கேரள மாநிலம் முழுவதும் சுற்றுகிறார்கள். முதல்வரின் உத்தரவு காரணமாகத் திருவனந்தபுரத்தை விட்டு வெளியே வருவதே மிகவும் கஷ்டமாக இருந்தது. இப்போது தலைமை ஆசிரியர் ஊரில் இல்லாததால் ஆசிரியர்களான நாங்கள் கேரளம் முழுவதும் சுற்றி வருகிறோம்" என்றார்.