Published:Updated:

காடுகளில் ஏன் இந்தப் பயணம்? - `மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சிக்கு மோடி ஒப்புக்கொண்ட பின்னணி

ராம் பிரசாத்

``நரேந்திர மோடியின் பெரிதும் அறியப்படாத இன்னொரு முகத்தை, காலநிலை மாற்றம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த இந்தப் பயணத்தில் உலகம் காணப்போகிறது" என பியர் க்ரில்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

மோடி
மோடி

டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் `மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சிக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடுமையான சூழல்களில் இறக்கிவிடப்படும் பியர் க்ரில்ஸ் எப்படி அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியே வருகிறார் என்னும் சர்வைவல் சீரிஸ்தான் மேன் வெர்சஸ் வைல்ட். தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் தொடர்புபடுத்து பியர் க்ரில்ஸை வைத்து மீம்ஸ்களே வெளியாகும். அந்த அளவுக்கு `மேன் வெர்சஸ் வைல்ட்’ பிரபலம்.

 பிரதமர் மோடி, பியர் க்ரில்ஸ்
பிரதமர் மோடி, பியர் க்ரில்ஸ்

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோட் ஒன்றுக்கான ப்ரமோ ஒன்று இன்று வெளியானது. சர்வதேசப் புலிகள் தினத்தை முன்னிட்டு இந்தச் சிறப்பு ப்ரமோவை வெளியிட்டது டிஸ்கவரி சேனல். பிரதமர் மோடி இந்த ப்ரமோவில் தோன்றியதுதான் ஆச்சர்யமே. ``நரேந்திர மோடியின் பெரிதும் அறியப்படாத இன்னொரு முகத்தை, காலநிலை மாற்றம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குறித்த இந்தப் பயணத்தில் உலகம் காணப்போகிறது" என பியர் க்ரில்ஸ் ட்வீட் செய்துள்ளார். இந்த எபிசோடு ஆகஸ்ட்12-ம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த ப்ரமோ வெளியானதுதான் தாமதம் மோடிக்கு எதிராகவும், ஆதரவாகவும் கமென்ட்ஸ்கள் இணையத்தை ஆக்கிரமித்தது.

இதுதொடர்பாக டிஸ்கவரி சேனல் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதித்தது ஏன் என்பது குறித்து பிரதமர் மோடி பேசியிருக்கிறார். அதில், ``இயற்கையான சூழலில் மலைகளிலும், காடுகளிலும் நான் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். அது எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசியலுக்கு அப்பாற்பட்ட எனது வாழ்க்கை குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சி, அதுவும் இயற்கையின் நடுவே என்றதும் ஆர்வமானேன். என்னைப் பொறுத்தவரை, இந்த நிகழ்ச்சியை மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இதன்மூலம் இந்தியாவின் வளமான சுற்றுச்சூழல் பாரம்பர்யத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், இயற்கையோடு இணக்கமாக வாழ்வதை வலியுறுத்தும் வாய்ப்பாக கருதுகிறேன். காடுகளில் பியர் க்ரில்ஸுடன் எனது நாள்களைச் செலவிட்டது அற்புதமான அனுபவம். இயற்கையின் ஆற்றலையும், தூய்மையும் அறிந்துகொண்டேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி

உத்தரகாண்ட்டில் இருக்கும் கார்பெட் தேசிய பூங்காவில் இந்த நிகழ்ச்சி தொடர்பான எபிசோடுகள் படமாக்கப்பட்டுள்ளன. அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் வருவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பாகவே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா இந்த நிகழ்ச்சியில் பியர் க்ரில்ஸ் உடன் தோன்றியுள்ளார்.