Published:Updated:

‘நவம்பர் 9’ அயோத்தி தீர்ப்பும்... பெர்லின் சுவர் வீழ்ச்சியும் - உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மோடி!

``ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர வேண்டும்" எனக் கூறி மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மோடி
மோடி

நீண்ட நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டு வந்த அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வில் உள்ள 5 நீதிபதிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். இதனால், நீதிபதிகளின் ஒருமித்த தீர்ப்பாக, ``பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதற்காகப் புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர வேண்டும்" எனக் கூறி மத்திய அரசு, உத்தரப்பிரதேச அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மோடி
மோடி

இந்த தீர்ப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணி அளவில் நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அதில், ``என் மனதில் இருப்பதை நாட்டு மக்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானது வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்த தருணம். மிக நீண்ட சட்ட நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. உச்ச நீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அயோத்தி வழக்கு தினமும் விசாரிக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் விரும்பியது, அது நடந்தது, இன்று ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக நடந்து கொண்டிருந்த இந்த வழக்கு இறுதியாக முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போது உச்சநீதிமன்றம் அனைத்து தரப்பினரையும் மிகுந்த பொறுமையுடன் கேட்டது.

`இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்; அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்!'-உச்ச நீதிமன்றம் #AYODHYAVERDICT

அனைவரின் சம்மதத்துடன் இந்த முடிவு வந்தது என்பது முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியான விஷயம். இந்த தீர்ப்பின் மூலம் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியா தான் நீதியை நிலைநாட்டும் நாடாக, பெரும் ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. மக்களாட்சி வலிமையாக தொடருகிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமைக்கு இன்றைய நாள் சிறந்த உதாரணம். வேற்றுமையும், எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. இனி புதிய இந்தியாவில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான வழி இந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு அரசியலமைப்பின் எல்லைக்குள் மிகவும் கடினமான பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

மோடி
மோடி

இன்று நவம்பர் 9, பெர்லின் சுவர் வீழ்த்தப்பட்ட நாள். இன்று கர்தார்பூர் நடைபாதையும் திறக்கப்பட்டது. இப்போது அயோத்தி தீர்ப்பு, எனவே இந்த தேதி ஒற்றுமையாக இருந்து முன்னேற செய்தியை தருகிறது. கர்தார்பூரில் புதிய வழித்தடம் திறக்கப்பட்டது போல இங்கே புதிய வழி திறக்கப்பட்டுள்ளது. நமது ஒற்றுமையே இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தீர்ப்பை வரவேற்கும் விதம் இந்தியாவின் கலாசாரம், சமூக நல்லிணக்கத்துக்கு சான்று. நமது ஜனநாயகத்தின் பலம் என்பதை உலகமே கண்டுள்ளது. இந்தியாவுக்கு இன்னும் பல சவால்கள், இலக்குகள் உள்ளன. அவற்றை நாம் ஒன்றாக அடைவோம். தேசத்தை கட்டமைக்கும் பொருட்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. புதிய இந்தியா முன்னேறும்போது யாரும் பின்னால் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

அயோத்தி தீர்ப்பும் உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய நிலையும்!