Published:Updated:

`இந்தியாவில் 8 நாளில் 10,000 பேர்..!’- மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி #Corona

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவில் 20,471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரையில் 15,859 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 20,000 -ஐ கடந்தது. இன்று, புதன்கிழமை மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி, இந்தியாவில் 20,471 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரையில் 15,859 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3,959 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா
worldometers

ஏப்ரல் 14-ம் தேதி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000 -ஐ தொட்டது. அந்த கணக்கின்படி, 8 நாள்களில் 10,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 6,191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் இருக்கிறது.

இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. கொரோனா தடுப்புப் பணியில் முன்னின்று போராடுபவர்கள் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள். நாட்டில் சில பகுதிகளில் மருத்துவர்கள் மீதும் சுகாதாரப் பணியாளர்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும் மருத்துவர்களைக் காக்க, மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருக்கிறார். மேலும், மருத்துவர்கள் மீதான வன்முறை எந்த வகையில் இருந்தாலும் அரசு பொறுத்துக்கொள்ளாது என்றும், இந்தக் குற்றத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடையாது எனவும் 30 நாள்களில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்த அவர், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பின் இந்தச் சட்டம் அமலுக்கு வரும் என்றார்.

மோடி
மோடி

இந்த நிலையில், வரும் திங்கள்கிழமை அன்று பிரதமர் மோடி மீண்டும் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் ஆலோசனை நடத்த இருக்கிறார். ஊரடங்கு மே மாதம் 3-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி, முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அடுத்த வாரத்தின் இறுதியில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000 -ஐ கடந்திருக்கும் இந்தச் சூழலில், முதல்வர்களுடன் மீண்டும் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளது பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு