Published:Updated:

Molflu : இந்தியாவின் முதல் கொரோனா மருந்து ரெடி! விலை எவ்வளவு தெரியுமா?

Molflu
News
Molflu ( Representational Image )

Molflu : 200 மில்லி கிராம் கேப்ஸ்யூல் வடிவில் இது கிடைக்கிறது. ஒரு வேளைக்கு நான்கு கேப்ஸ்யூல்கள் என ஒரு நாளில் இரண்டு வேளை சாப்பிட வேண்டும்.

கொரோனா சிகிச்சைக்கான இந்தியாவின் முதல் மருந்தான மோல்ஃப்ளூ, விற்பனைக்குத் தயாராகி விட்டது. ஜனவரி இரண்டாவது வாரத்தில் இது கடைகளில் கிடைக்கும். 'உலகின் மலிவுவிலை கொரோனா மருந்து' என்று பெருமையுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது இது.

'நோய் தீவிரம் அடையும் ஆபத்து உள்ளவர்களுக்கும், ஆக்சிஜன் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாதவர்களுக்கும் இந்த மருந்தைத் தரலாம்' என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி தந்திருக்கிறது. கொரோனா நோயாளிகள் வீட்டிலிருந்தபடியே இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். அறிகுறிகள் தோன்றிய மூன்றாம் நாளுக்குள், மருத்துவரின் பரிந்துரையுடன் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் தீவிரமாகி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய ஆபத்தை இது தடுக்கிறது. 200 மில்லி கிராம் கேப்ஸ்யூல் வடிவில் இது கிடைக்கிறது. ஒரு வேளைக்கு நான்கு கேப்ஸ்யூல்கள் என ஒரு நாளில் இரண்டு வேளை சாப்பிட வேண்டும். ஐந்து நாட்களில் தொடர்ச்சியாக இப்படி மொத்தம் 40 கேப்ஸ்யூல்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கேப்ஸ்யூல் விலை 35 ரூபாய். ஒரு நோயாளி இந்த சிகிச்சையைப் பெறுவதற்கு மொத்தம் 1,400 ரூபாய் செலவாகும்.

Covid
Covid
AP Illustration/Peter Hamlin

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அமெரிக்காவில் மெர்க் நிறுவனம் அறிமுகம் செய்த மோல்னுபிரவிர் என்ற மருந்தே இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தால் இந்தப் பெயரில் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த சிகிச்சைக்கு 52 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கிறது. இந்தியாவில் அதே மருந்து வெறும் 1,400 ரூபாயில் கிடைக்கிறது.
கொரோனா வைரஸின் மரபணு இழையில் ஒரு கோளாறை ஏற்படுத்தி, அது நம் உடலுக்குள் பல மடங்காகப் பெருகுவதை இந்த மருந்து தடுக்கிறது. இதனால் கொரோனா தொற்று தீவிரம் அடையாதபடி தடுக்கப்படுகிறது. இந்த மருந்துக்கு அமெரிக்கா, பிரிட்டன், டென்மார்க் போன்ற நாடுகள் உடனடியாக அனுமதி தந்திருக்கின்றன. கொரோனா தொற்று அதிகம் இருக்கும் மாநிலங்களுக்கு இந்த கேப்ஸ்யூல்கள் அதிகம் அனுப்பி வைக்கப்படும் என்று டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிப்லா, சன் பார்மா, நேட்கோ, ஹெடெரோ உள்ளிட்ட 13 இந்திய மருந்து நிறுவனங்கள் மோல்னுபிரவிர் மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்காக மெர்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இவை வெவ்வேறு பிராண்ட் பெயர்களில் இந்த மருந்தை விற்கப் போகின்றன. சிப்லா நிறுவனம் 'சிப்மோல்னு' என்ற பெயரில் இதை விற்க இருக்கிறது.

பல நிறுவனங்கள் ஒரே நேரத்தில் தயாரிப்பதால்தான் இந்தியாவில் இந்த மருந்தின் விலை குறைவாக இருக்கிறது. எனவே, வீட்டில் இருந்தபடியே கொரோனா சிகிச்சை பெறுவது இனி சுலபமாகும்.