ராஜஸ்தான் மாநிலத்தில், கடந்த 2016 செப்டம்பரில், சந்த்வாஜி காவல் நிலையத்துக்குட்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையத்தில், சஷிகாந்த் சர்மா என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அப்போது உயிரிழந்தவரின் உடல், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி, இறந்தவரின் உறவினர்கள் ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், சந்த்வாஜியில் வசிக்கும் ராகுல் கண்டேரா, மோகன்லால் கண்டேரா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.

அதன் பிறகு விசாரணை நடத்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட 15 வகையான ஆதாரங்களை கைப்பற்றி ஒரு பையில் சேகரித்து வைத்ததாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியானது. பின்னர், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில், வழக்கின் ஆதாரங்களை போலீஸார் சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கு ஆதாரங்களை குரங்கு தூக்கிச் சென்று விட்ட தகவலை போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.
வழக்கின் முக்கிய ஆதாரங்கள் அடங்கிய பையை, போலீஸார் மல்கானா போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகே உள்ள மரத்தடியில் வைத்திருக்கின்றனர். அப்போது அந்தப் பையை குரங்கு ஒன்று தூக்கிச் சென்று விட்டதாக போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை போலீஸார் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகவும் சமர்ப்பித்திருக்கின்றனர்.
