Published:Updated:

`ஒருவருக்கு நடந்ததுதான் அனைவருக்கும்!’ -சொந்தக் கட்சிக்கு எதிராகத் திரண்ட உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், யோகி ஆதித்யநாத்தின் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தற்போது பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு, யோகி ஆதித்யநாத் முதல்வராக செயல்பட்டுவருகிறார். கடந்த சில காலமாகவே உத்தரப்பிரதேசத்தில் தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்றுவருவதால், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆளும் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்களே தங்கள் சொந்தக் கட்சியின் ஆட்சிக்கு எதிராகத் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது, நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது.

கிஷோர் குர்ஜார்
கிஷோர் குர்ஜார்

எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டு!

காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர், கிஷோர் குர்ஜார். கடந்த வாரம், ஹோட்டல் லைசென்ஸ் தொடர்பான விவகாரத்தில், குர்ஜார் தன்னை அலுவலகத்துக்கு அழைத்து தாக்கியதாக, அப்பகுதியின் உணவு ஆய்வாளர் (Food Inspector) அசுதோஷ் சிங் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, எம்.எல்.ஏ மீது காஸியாபாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரப்பிரதேச பா.ஜ.க தலைமை, குர்ஜாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Vikatan

இந்நிலையில், நேற்று அம்மாநிலத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்க நேரம் வழங்குமாறு சபாநாயகர் நாராயண் தீக்‌ஷித்தை கேட்டுள்ளார் குர்ஜார். ஆனால், உத்தரப்பிரதேச அமைச்சர் சுரேஷ் கண்ணா, குர்ஜாரை பேச அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவித்து, அவரை அமரும்படி சபையிலேயே எச்சரித்துள்ளார்.

எம்.எல்.ஏக்கள் தர்ணா
எம்.எல்.ஏக்கள் தர்ணா

இதற்கிடையில், சுரேஷ் கண்ணா மற்றும் உத்தரப்பிரதேச அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து குர்ஜார், சட்டமன்ற வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டார். அடுத்த சில நொடிகளில், அவருக்கு ஆதரவாக 100-க்கும் அதிகமான பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் இணைந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களும் இவர்களின் தர்ணாவில் இணைந்துள்ளனர். அப்போது , ‘ஒரு எம்.எல்.ஏ-வை அவமதித்தது அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் அவமதித்ததற்குச் சமம்’ என்றும் ‘ஒருவருக்கு நடந்ததுதான் நாளை அனைவருக்கும்’ என்ற கோஷங்களையும் எழுப்பியுள்ளனர்.

இதனால் உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் நீண்ட நேரம் கூச்சல், குழப்பம் நீடித்துள்ளது. தொடர் சர்ச்சையினால், அவையை இன்று காலை வரை ஒத்திவைத்தார், சபாநாயகர். அப்போதும் தர்ணாவில் ஈடுபட்டிருந்த எம்.எல்.ஏ-க்கள் கலையாமல் கோஷம் எழுப்பியுள்ளனர். இறுதியாக, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்த பிறகே அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சட்டமன்றத்திலிருந்து கலைந்து சென்றனர்.

பா.ஜ.க
பா.ஜ.க

எம்.எல்.ஏ-வை பேச அனுமதிக்காத காரணம்!

லோனி மாவட்ட எம்.எல்.ஏ-வை சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காததற்கு வேறு சில காரணங்களும் இருப்பதாக, பா.ஜ.க தரப்பில் கூறப்பட்டுள்ளது. குர்ஜாரின் 16 வயது மகன், காரை அதிவேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, தேர்தல் அதிகாரிகளுடன் குர்ஜார் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, எம்.எல்.ஏ -வின் கூட்டாளி போக்குவரத்து விதிகளை மீறி காவலர்களுடன் ரகளையில் ஈடுபட்டது போன்ற பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகள் குர்ஜார் மீது சுமத்தப்பட்டுள்ளதால், அவர் பேசாமல் இருப்பதே சிறந்தது என்று நினைத்து அனுமதி மறுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தன் கட்சியைச் சேர்ந்தவர்களே தன்னைக் கொலை செய்ய நினைப்பதாக எம்.எல்.ஏ குர்ஜார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.