Published:Updated:

இடி-மின்னல்:`பீகார், உ.பி-யில் 100க்கும் மேற்பட்டோர் பலி!’ - பிரதமர் இரங்கல்

இடி-மின்னல்
இடி-மின்னல் ( Pixabay )

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார், இடி-மின்னல் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கொரோனா, வெட்டுக்கிளி தாக்குதல், நிலநடுக்கம், புயல் என தொடர்ந்து இந்தியா பல பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்தப் பிரச்னைகளில் இருந்தே இந்தியா இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது வடமாநிலங்கள் மழை, இடி மற்றும் மின்னல் போன்றவற்றால் அதிகமாக பாதிப்படைந்து வருகிறது. குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மழையால் கடுமையாகப் பாதிப்படைந்து வருகின்றன. இதனால், மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை இழந்துள்ளனர். இந்த நிலையில், பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட இடி மற்றும் மின்னல் தாக்குதலில் கடந்த வியாழக்கிழமை 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

மழை
மழை
Pixabay

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி-மின்னல் தாக்கி ஏறக்குறைய 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். கோரக்பூர் மற்றும் பஸ்தி பகுதியில் மட்டும் சுமார் 13 பேர் இந்த இடி-மின்னல் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். பிரயாக்ராஜ் மற்றும் அம்பேத்கர் நகர் பகுதிகளில் முறையே நான்கு மற்றும் மூன்று பேர் இந்த மின்னல் தாக்குதலில் இறந்துள்ளதாகவும் சித்தார்த்நகர் பகுதியில் மூன்று பேரும் குஷிநகர் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களால் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இடி மற்றும் மின்னல் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் விவசாயிகள் அல்லது வயல்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் கிழக்கு, மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஒருசில இடங்களில் சராசரியாக 33.4 மி.மீ மழை பதிவானதாகக் கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் ஜூன் 28-ம் தேதி வரை தொடர்ந்து கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கொட்டித் தீர்த்த கனமழை... பறிபோகும் உயிர்கள்... அச்சத்தில் கடலூர், டெல்டா மாவட்டங்கள்!

பீகார் மாநிலம் இந்த இடி-மின்னல் தாக்குதலால் மிகக்கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அம்மாநிலத்தில் ஏறக்குறைய 83 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேரும் மதுபானி, நவாடா ஆகிய பகுதிகளில் தலா எட்டு பேரும் பாகல்பூர், சிவான் ஆகிய பகுதிகளில் தலா ஆறு பேரும் கிழக்கு சேம்பரன், தர்பாங்கா மற்றும் பாங்கா பகுதிகளில் தலா ஐந்து பேரும் இந்த மின்னல் தாக்குதல்களில் பலியாகியுள்ளனர்.

ககாரியா, மேற்கு சேம்பரன், சமஸ்திபூர், ஷியோகர், கிஷன்கஞ்ச், சரண், அவுரங்காபாத், கைமூர் உள்ளிட்ட பல இடங்களில் இறப்புகள் பதிவாகியுள்ளன. பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூபாய் 4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நேபாளத்தின் எல்லைகளில் அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. மேலும், இறப்புகளை உறுதி செய்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
File Photo

இடி மற்றும் மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில், ``பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் சில மாவட்டங்களில் கடும் மழை மற்றும் மின்னல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர் என்ற வேதனைக்குரிய செய்தி கிடைத்தது. மாநில அரசுகள் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் குழப்பான சூழலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். பீகார் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கால்நடைகளும் மழை மற்றும் மின்னல் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றன. பல மாவட்டங்களில் அதிகளவில் பொருள்களும் சேதமாகியுள்ளன.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் உறுப்பினர்கள் பாதிப்படைந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கையும் ராகுல் காந்தி விடுத்துள்ளார்.

மலையில் விழுந்த நீர் இடி, பிரளயமான அருவிகள்... சிதைந்த பச்சமலை கிராமங்கள்..!
அடுத்த கட்டுரைக்கு