Published:Updated:

மும்பை: ஹவுஸிங் சொசைட்டியில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்; போலீஸ் வழக்கு பதிவு!

தடுப்பூசி
தடுப்பூசி

மும்பையில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டதில் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் போலி கொரோனா தடுப்பூசிப் பிரச்னை பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. மக்கள் குடியிருப்பு வளாகம், கம்பெனிகளில் தனியார் மருத்துவமனைகளின் உதவியோடு கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்த முகாம்களை நடத்த அரசு எந்த விதியையும் வகுக்காத காரணத்தால், அதைப் பயன்படுத்திக்கொண்டு மோசடிக் கும்பல் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது. மேற்கு மும்பையிலுள்ள பிரபல ஹவுஸிங் சொசைட்டியில் நடத்தப்பட்ட போலி தடுப்பூசி முகாமில் 390 பேர் ஊசி செலுத்திக்கொண்டனர். ஒவ்வொருவரும் தலா 1,000 ரூபாய்க்கும் அதிகமாகக் கொடுத்து இந்த ஊசியை எடுத்துக்கொண்டனர். ஆனால், தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான சான்றிதழ் கிடைக்க தாமதம் ஏற்பட்டதோடு, கிடைத்த சான்றிதழில் தடுப்பூசி முகாம் நடத்தியதாகக் கூறப்படும் மருத்துவமனையின் பெயர் இடம்பெறாமல், வேறு மருத்துவமனையின் பெயர் இடம்பெற்றிருந்தது. இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.

சித்திரிப்பு படம்
சித்திரிப்பு படம்

போலீஸார் விசாரணை நடத்தி, இந்த மோசடியில் தொடர்புடைய நான்கு பேரைக் கைதுசெய்துள்ளனர். அவர்களுக்கு எப்படித் தடுப்பூசி கிடைத்தது என்பது குறித்தும், உண்மையில் அவர்கள் செலுத்தியது தடுப்பூசியா அல்லது வேறு ஏதாவது திரவத்தை செலுத்தினார்களா என்பது குறித்தும் மும்பை மாநகராட்சியும், போலீஸாரும் விசாரித்துவருகின்றனர். இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாநில அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மும்பை முழுக்க ஒன்பது இடங்களில் போலி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக போலீஸார் நான்கு வழக்குகளைப் பதிவுசெய்து விசாரித்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பூசி முகாம்களில் 2,000 பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர். இதுவரை 400 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. ``காந்திவலி ஹவுஸிங் சொசைட்டியில் தடுப்பூசி முகாம் நடத்தியது தொடர்பாக டாக்டர் ஒருவரைத் தேடிவருகிறோம். சில குற்றவாளிகளின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் திபன்கர் தத்தா, குல்கர்னி ஆகியோர், ``போலி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு எதாவது பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதா என்பதை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிய வேண்டும். குற்றவாளிகள் எதைத் தடுப்பூசியாக செலுத்தினர் என்று தெரியவில்லை. அதனால் என்ன ஆனது என்றும் தெரியவில்லை’’ என்று கவலை தெரிவித்தனர். தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு இதுவரை வழிமுறைகள் வகுக்கப்படாதது குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், ``இது தொடர்பாக இதற்கு முந்தைய விசாரணையின்போதே மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தோம். ஆனால், அந்த உத்தரவு இன்னும் அமல்படுத்தப்படவில்லை. மாநில அரசு, தனியார் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அரசு இனியும் தாமதம் செய்யக் கூடாது’’ என்வர்கள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கூறி, விசாரணையை வரும் 29-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். மகாராஷ்டிராவில் மும்பையில் மட்டுமே இந்த மோசடி நடந்துள்ளது. இதில் 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு