Published:Updated:

ஆந்திரா: 'குழந்தைகளை அச்சுறுத்தும் கொரோனா; 2 வாரத்தில் 20,000-ஐ தொட்ட பாதிப்பு'!

கொரோனா
கொரோனா

ஆந்திராவில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 20,000-க்கும் அதிகமான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திராவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. நோய் பரவலைக் கட்டுப்படுத்த மக்களைப் பாதுகாக்க மாநில அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், நோய்த்தொற்று பாதிப்பு மட்டும் குறைந்தபாடில்லை. அதிலும், குறிப்பாக வீரியமாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசின் தாக்குதலுக்கு பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியர் அதிகளவில் இலக்காகிக் கொண்டிருப்பது மாநில சுகாதாரத்துறையினரைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆந்திர சுகாதாரத்துறை வெளியிடும் தினசரி கொரோனா பாதிப்பு தரவுகளின்படி பார்க்கையில், மாநிலம் முழுவதும் கடந்த வாரங்களில் மட்டும் 20,000-க்கும் அதிகமான சிறு வயது பிள்ளைகளுக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிகுதியாக உள்ள கோதாவரி மாவட்டத்தில் 4,200 குழந்தைகளுக்கும், சித்தூர் மாவட்டத்தில் 3,800 குழந்தைகளுக்கும் அதிகபட்சமாக நோய்த்தொற்று பாதிப்பு கடந்த 2 வாரங்களில் உறுதியாகியுள்ளது. நோய் பரவலைக் குறைக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பது பொதுமக்களின் அலட்சியத்தைப் பிரதிபலிப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ஆந்திராவில் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று சமீபமாக அதிகளவில் பரவி வருவது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், "கடந்த 2 வாரங்களில் ஆந்திராவில் ஆயிரக்கணக்கில் குழந்தைகள் நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். சுகாதாரத்துறையினரின் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர் - சிறுமிகளும், 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. குழந்தைகளுக்குப் பெரியவர்களைப் போல அறிகுறிகள் தீவிரமாக இருக்காது. அறிகுறிகளற்ற கொரோனா பாதிப்பு என்று கூடச் சொல்லலாம். அப்படி பாதிப்பு ஏற்படும்போது குழந்தைகள் வழக்கம்போல் சக நண்பர்களிடமும், உறவினர்களிடமும் இணக்கமாக இருக்கும்போது நோய்த்தொற்று அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவிவிடுகிறது. நாள்கள் போகப்போகக் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை மோசமாகும். அந்த நேரத்தில்தான் அவர்களின் பெற்றோர் கவனத்திற்கு விஷயம் தெரிய வரும். அவர்களும் மருத்துவமனைக்கு விரைவார்கள். எனவே, பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இந்த சூழலில் கட்டுப்படுத்திப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று எச்சரிக்கின்றனர்.

கொரோனா `டெல்டா' இருக்கட்டும்; மற்ற வைரஸ்கள் எப்படி பெயரிடப்பட்டன தெரியுமா?

நோய்த்தொற்று காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்று குழந்தைகள் நல ஆர்வலர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர். குழந்தைகள் நல ஆர்வலர் பிரகாஷ் ராவ் இது தொடர்பாகப் கூறுகையில், "மாநிலத்தில் சமீபமாகக் குழந்தைகள் வைரஸ் நோய்க்கு அதிகளவில் இலக்காகிக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. ஆந்திர அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாம் அலையிலேயே குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே, அரசு உடனடியாக குழந்தைகளுக்கான பிரத்யேக கொரோனா சிகிச்சை மையங்களை அமைத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். கொரோனா மூன்றாம் அலையின் அச்சுறுத்தல் வேறு இருப்பதால் குழந்தைகள் நலனில் கூடுதல் அக்கறை கொண்டு, முன்னெச்சரிக்கையுடன் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு