Published:Updated:

எதிர்பார்த்தது 90%... கிடைத்ததோ 5.4%..! - ரேபிட் டெஸ்ட் கிட்களால் கலங்கும் மாநிலங்கள்; ICMR ஷாக்

 ரேபிட் டெஸ்ட்
ரேபிட் டெஸ்ட் ( படம்: தே.தீட்ஷித் )

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பதிலுக்காகக் காத்திருப்பதாகக் கூறிய ராஜஸ்தான் அரசு, அவர்களும் எங்களின் குற்றச்சாட்டை உறுதி செய்தால் ரேபிட் டெஸ்ட் கிட்களைத் திரும்ப ஒப்படைப்போம் எனத் தெரிவித்தது.

`கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மிக முக்கியமான நடவடிக்கை, பரிசோதனை வளையத்தை அதிகரிப்பதுதான். முடிந்த வரை மக்களை பரிசோதனை செய்து அதில் கொரோனா பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுபவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்தி வைத்தால்தான் இதன் பரவலைத் தடுக்க முடியும்’ என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

இதன் அடைப்படையில் உலகம் முழுவதும் பரிசோதனை எண்ணிக்கையைக் கூட்ட, ரேபிட் டெஸ்ட் கிட் என்னும் விரைவில் பரிசோதனை முடிவுகளை அறியும் கருவிகள் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் கேரளாவைத் தொடர்ந்து தமிழகமும் இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்தது. எனினும், மாநிலங்கள் தனியாக ஆர்டர் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு கேட்டுக்கொண்டதால், மாநில அரசுகள் தங்கள் ஆர்டர்களை ரத்து செய்துவிட்டு ரேபிட் டெஸ்ட் கிட் கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

அமெரிக்காவுக்குப் பார்சலான தமிழக ஆர்டர்; குழப்பும் அரசு - ரேபிட் டெஸ்ட் விவகாரத்தில் என்ன நடக்கிறது?

சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டன. பின்னர் அவை, மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனைகள் நடைபெறத் தொடங்கியது.

Representational Image
Representational Image

இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் மாநில அரசு, ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனையை நிறுத்தப்போவதாகவும், அதில் வரும் முடிவுகள் சரியானதாக இல்லை எனவும் குற்றம் சாட்டியது. இதுதொடர்பாகப் பேசிய அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர், ரகு ஷர்மா, ``ரேபிட் டெஸ்ட் கிட்கள் 5.4% மட்டுமே சரியான முடிவுகளைத் தருகிறது. அது 90% சரியான முடிவுகளைத் தரும் என நம்பித்தான் பரிசோதனைகளைத் தொடங்கினோம்” என்றார்.

ரேபிட் டெஸ்ட் கிட்களை பரிசோதிக்க ஒரு குழு அமைக்கப்பட்டதாகவும் அந்தக் குழு சமர்பித்த அறிக்கையின்படி இந்தப் பரிசோதனை உடனடியாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கிட் வழங்கும் மாறுபட்ட முடிவுகள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்குத் தகவல் சொல்லப்பட்டது.

கொரோனா
கொரோனா

ராஜஸ்தானில் 168 பேருக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அதில், கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்யும் பி.சி.ஆர் கருவி மூலம் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்ட சிலருக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதித்ததில் நெகட்டிவ் என வந்ததாகவும் ராஜஸ்தான் மாநிலம் குற்றம்சாட்டியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இது போன்ற குழப்பங்கள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பதிலுக்காகக் காத்திருப்பதாகக் கூறிய ராஜஸ்தான் அரசு, அவர்களும் எங்களின் குற்றச்சாட்டை உறுதி செய்தால் ரேபிட் டெஸ்ட் கிட்களைத் திரும்ப ஒப்படைப்போம் எனத் தெரிவித்தது. இந்த நிலையில் அடுத்த இரு தினங்களுக்கு புதிதாக வந்த ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி கங்காகேத்கர்
ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி கங்காகேத்கர்

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானி கங்காகேத்கர், ``இன்னும் இரண்டு தினங்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்களைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். களத்தில் இந்த கிட் கொண்டு பரிசோதனை மேற்கொள்கையில் முடிவுகளில் மாறுபாடுகள் இருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அடுத்த நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து தெரிவிப்போம்” என்றார்.

`சீன மருத்துவர் மூலம் பரவிய கொரோனா?' - மறுக்கும் தென்கொரியா; விலகாத கிம் உடல்நிலை மர்மம்

தொடர்ந்து அவர் கொரோனா குறித்து பேசுகையில், ``இது முற்றிலும் புதிய வகையான நோய். அறிவியலும் இதற்கு எதிராக வளரத்தான் செய்கிறது. கடந்த மூன்று மாதங்களில் கொரோனாவை கண்டறியும் பிசிஆர் என்னும் கிட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 மருந்துகள் மனித உடலில் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. கடந்த காலங்கள் வந்த எந்த நோய்க்கும் இந்த அளவுக்கு ஆய்வுகள் நடைபெற்றதில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு