இந்தியாவில், சென்னை, தில்லி உட்பட பல இடங்களில் குடியரசு தினத்தையொட்டி ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை அடுத்து, இன்றும் 25.01.2023, நாளையும் 26.01.2023 ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு, மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆகஸ்ட் 2021ல், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பல தளர்வுகளுடன், புதிய ட்ரோன் விதிகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மாற்றியமைத்தது. போக்குவரத்து, விவசாயம், அவசர கால உதவி, பாதுகாப்பு, கண்காணிப்பு போன்ற பல துறைகளில் ட்ரோன்கள் பயனளிப்பதால், அரசாங்கமும் ட்ரோன் தயாரிப்பையும் விற்பனையையும் ஊக்கப்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் ட்ரோன் சார்ந்த தொழில்கள் 34.4% அதிகரித்துள்ளன. மேலும், இந்தியா உலகளாவிய ட்ரோன் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ட்ரோன் விதிகள்:
இது தவிர, பொதுவாகவே இந்தியாவில் இந்த ட்ரோன்களை இயக்க சில விதிமுறைகளை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைப்படத்தில் பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற மூன்று நிறங்களில் இடங்களைப் பிரித்துள்ளனர். பச்சை இடங்களில் ட்ரோன்கள் இயக்க எந்தத் தடையும் கிடையாது. அதிகாரிகளின் ஒப்புதலும் தேவையில்லை. மஞ்சள் நிற இடங்களில் சில கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு ட்ரோன்களை இயக்கிக் கொள்ளலாம். சிகப்பு இடங்களில் ட்ரோன்கள் இயக்க முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. மஞ்சள், சிகப்பு இடங்களில் ட்ரோன் இயக்க அதிகாரிகளின் ஒப்புதல் கண்டிப்பாக தேவை.
மும்பை, தில்லி, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் போன்ற மெட்ரோ நகரங்களின் சர்வதேச விமான நிலையங்கள் அமைந்திருக்கும் இடங்களில், ஐந்து கிலோ மீட்டருக்குள் ட்ரோன் இயக்க கூடாது. இந்திய எல்லைகளின் அருகே 25 கிலோமீட்டருக்கு வெளியே ட்ரோன்கள் இயக்கி கொள்ளலாம்.
ட்ரோன்கள் மூலம் ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதை 48 மணி நேரத்திற்குள் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.