Published:Updated:

`பசியால் இறந்த தாய், அறியாத குழந்தை... மனதை உருக்குலைக்கும் வீடியோ!’- தொடரும் தொழிலாளர்களின் அவலநிலை

குழந்தை
குழந்தை

``அவரது உடல், நடைமேடையில் போர்வை போர்த்திய நிலையில் கிடத்தப்பட்டுள்ளது. அப்போதுதான், தன் தாய் இறந்தது தெரியாமல் அந்தக் குழந்தை, தன் தாயை எழுப்ப முயன்றும் போர்வைக்குள் நுழைவதும் வெளியே வருவதுமாக இருந்துள்ளது.”

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கால், புலம்பெயந்த தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். பசி, பட்டினி, மரணம் என ஒவ்வொரு நாளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் பற்றி வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும் மனதை உருகுலைய வைப்பதாகவும் உள்ளது. இதுதொடர்பாக வெளியாகும் புகைப்படங்களும் வீடியோக்களும் தொழிலாளர்களின் அவலநிலையை சமூகத்துக்கு உரைக்கச் சொல்லும் சான்றாக அமைகிறது எனலாம். அவ்வகையில், பீகார் மாநிலத்தில் உள்ள ரயில்வே நிலையத்தில் இறந்துகிடக்கும் தன் தாயை எழுப்ப முயலும் குழந்தை ஒன்றின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

வீடியோவில், நடக்கத் தொடங்கியிருக்கும் குழந்தை ஒன்று இறந்துகிடக்கும் தன் தாயின்மீது போர்த்தப்பட்டுள்ள போர்வையைத் தூக்கி உள்ளே நுழைகிறது. பின்னர், வெளியே வந்து திரும்பிச் செல்கிறது. குழந்தையின் தாய் சிறிதும் அசையவில்லை. தாயின்மீது போர்த்தப்பட்டுள்ள போர்வை மட்டும் காற்றில் அசைகிறது.

இறந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறியதுபடி, அவர் பசி, அதிக வெப்பநிலை, உடலில் நீர் வற்றுதல் போன்ற காரணங்களால் இறந்ததாகத் தெரிகிறது. இந்தப் பெண்ணின் வயது 23 என்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கான சிறப்பு ரயிலில் முசாபர்பூர் ரயில் நிலையத்துக்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே ரயில் நிலையத்தில், இரண்டு வயது குழந்தையும் போதிய உணவின்மை மற்றும் அதிக வெப்பத்தால் கடந்த ஞாயிற்றுக் கிழமை இறந்தது.

`விபத்தில் இறந்த தாய்.. அழுத குழந்தை.. குழம்பிய தொழிலாளி!’ - புலம்பெயர்ந்தவர்களைத் தொடரும் சோகம்

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயிலில் இந்த 23 வயது பெண் ஏறியுள்ளார். அந்தப் பெண், தனது சகோதரி, சகோதரியின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கதிஹார் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்ததாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. போதிய உணவும் குடிநீரும் இல்லாததால் அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மிகவும் சோர்வான நிலையில் இருந்த அவர், முசாபூர் ரயில் நிலையம் வந்ததும் மயங்கி விழுந்துள்ளார். அவரது உடல், நடைமேடையில் போர்வை போர்த்திய நிலையில் கிடத்தப்பட்டுள்ளது. அப்போதுதான், தன் தாய் இறந்தது தெரியாமல் அந்தக் குழந்தை தன் தாயை எழுப்ப முயன்றும் போர்வைக்குள் நுழைவதும் வெளியே வருவதுமாக இருந்துள்ளது.

ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில், அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், அவர் ஏற்கெனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக போலி செய்திகள் எதையும் பரப்ப வேண்டாம் என்று அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக ட்வீட் செய்துள்ளது.

சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் மக்கள்
சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் மக்கள்

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மனைவி, குழந்தைகளுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாகவும், கிடைத்த வாகனங்களில் ஏறியும் பயணம் செய்துவருகின்றனர். அவ்வாறு செல்லும்போது ஏற்பட்ட விபத்துகளில், அதிக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். நடைப்பயணங்களில் சோர்வு, பசி காரணங்களால் இறந்தவர்களும் அதிகம். இவர்களின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு ரயில் சேவைகளை ஏற்படுத்தி இருந்தாலும் பயணக் கட்டணம், அனுமதி போன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்கள் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அதிகரித்துவரும் வெப்ப நிலையும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 50 டிகிரியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமையே புலம்பெயர்ந்த தொழிளாலர்கள் சார்ந்த பல பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

`மகன் இறந்துவிட்டதாகக் கூறினார்!’ -புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் புகைப்படம் எடுத்தவரின் கள அனுபவம்
அடுத்த கட்டுரைக்கு