Published:Updated:

`மளிகை வாங்க அனுப்பினால் மனைவியோடு வந்து நிற்கிறான்!’ -போலீஸ் ஸ்டேஷனில் கலங்கிய தாய்

காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி
காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி

``என்னால் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன்” என்று காவல் நிலையத்தில் கண்ணீரோடு இளைஞரின் தாய்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், ஊரடங்கும் அமலில் இருந்துவருகிறது. அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வந்துகொண்டிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில், மளிகை சாமான்கள் வாங்க வெளியே சென்ற வாலிபர், மணப்பெண்ணுடன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இதனால் கோபமும் கவலையும் அடைந்த இளைஞர் குட்டு என்பவரின் தாயார், மருமகளை வீட்டுக்குள் அனுமதிக்காமல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினரிடம் அவர் அளித்த புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இளைஞரின் தாய், ``நான் என் மகனை மளிகைப் பொருள்கள் வாங்க வெளியே அனுப்பினேன். வீடு திரும்பியபோது, கல்யாணம் செய்துகொண்டோம் என ஒரு பெண்ணோடு வந்து நின்றான். என்னால் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதனால்தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன்” என கண்ணீரோடு கூறியுள்ளார்.

திருமணம்
திருமணம்
மாதிரிப் படம்

மணமகனிடம் இதுதொடர்பாக நடந்த விசாரணையில், திருமணம் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹரித்வாரில் உள்ள சமாஜ் மந்திர் கோயிலில் நடந்ததாகக் கூறியுள்ளார். மேலும், ``போதிய சாட்சிகள் இல்லாததால், எங்களுக்கு திருமணச் சான்றிதழ் கிடைக்கவில்லை. அதனால் திருமண சான்றிதழைப் பெற ஹரித்வாருக்கு செல்வதென்று முடிவெடுத்தேன். ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், அங்கு சென்று சான்றிதழை பெற முடியாமல் போனது. என் மனைவி சவிதா தங்கியுள்ள விடுதியில் ஊரடங்கை காரணம்காட்டி, உடனேயே இடத்தை காலிசெய்யும்படி உரிமையாளர்கள் அழுத்தம் கொடுத்துவந்தனர். பல இடையூறுகளைப் பொறுத்துக்கொண்டே இத்தனை நாள்கள் என் மனைவி அங்கு வசித்துவந்தாள். இதற்குமேலும் அவளை தவிக்கவிட நான் விரும்பவில்லை. அதனால், அம்மா எங்களைப் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவா இல்லை என உறுதியோடு முடிவெடுத்து, வீட்டுக்கு அவளை அழைத்துவந்துவிட்டேன்” என குட்டு காவல்துறையினரிடம் கூறியுள்ளார். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் திருமண சான்றிதழ் கிடைத்துவிடும் என எதிர்பார்ப்பதாகவும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

தலைமுடி இழந்து சோகத்தில் மனைவி... கணவன் செய்த காதல் செயல் !  | Corona Updates
அடுத்த கட்டுரைக்கு