பெங்களூருவில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை நான்காவது மாடியிலிருந்து தூக்கி வீசிவிட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வெளியாகியிருக்கும் பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி காண்போரைக் கதிகலங்கச் செய்திருக்கிறது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு எஸ்.ஆர்.நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்தக் குடியிருப்பில் மென்பொறியாளர் ஒருவர், பல் மருத்துவராகப் பணிபுரியும் தன்னுடைய மனைவியுடன் வசித்துவருகிறார். இந்தத் தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகள் இருந்தாள்.
அந்தக் குழந்தைக்கு செவித்திறன் மற்றும் பேச்சுக் குறைபாடு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், குழந்தை குறித்துக் கவலைப்பட்டுவந்த தாயார், மன உளைச்சலில் குழந்தையைக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்வதென முடிவெடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதையடுத்து, வீட்டின் நான்காவது தளத்திலிருந்து தன்னுடைய குழந்தையை கீழே வீசிய அந்தப் பெண்... தானும் கீழே குதிக்க முயன்றார். இதை பார்த்துக்கொண்டிருந்த குடியிருப்புவாசிகள் விரைந்து அவரை மீட்டனர். கீழே போடப்பட்டத்தில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டாள்.
அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீஸார் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.