Election bannerElection banner
Published:Updated:

வெஸ்டர்ன் கழிவறை, டி.வி, மெத்தை... நாடுகடத்தப்படும் நிரவ் மோடிக்குத் தயாராக இருக்கும் வி.ஐ.பி சிறை!

நிரவ் மோடி
நிரவ் மோடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடிக்கும் அதிகமாகக் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்த நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்திருப்பதால் அவருக்காக மும்பை ஆர்தர் ரோடு சிறையை அதிகாரிகள் தயார்படுத்தியிருக்கிறார்கள்.

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நஷ்டத்தைச் சந்தித்துவருகின்றன. பொதுத்துறை வங்கியில் கடன் பெற்ற விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சி உட்பட பல தொழிலதிபர்கள், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். பல ஆயிரம் கோடி ரூபாய்களை, வாராக் கடனில் தள்ளுபடி செய்ய வேண்டிய நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டது. இதில் பொதுத்துறை வங்கிகள் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கின்றன.

ஆர்தர் ரோடு சிறை
ஆர்தர் ரோடு சிறை

அந்த வரிசையில், பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ் மோடியை, இந்தியாவுக்கு நாடுகடத்த அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது. 2011-ம் ஆண்டிலிருந்து நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரத்துக்காகக் கடன் வாங்கி மோசடி செய்திருக்கிறார். மொத்தம் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு அவர் கடன் மோசடியில் ஈடுபட்டது, வங்கித்துறையை ஆட்டம் காணவைத்தது. அவருடன் சேர்ந்து அவரின் உறவினர் மெஹுல் சோக்‌சியும் தன் பங்குக்கு கணிசமான அளவு கடன் வாங்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். 2018-ம் ஆண்டு இந்த மோசடி வெளியுலகத்துக்கு வரும் முன்பாகவே இருவரும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் தப்பிச் சென்ற பிறகுதான் அவர்களின் மோசடியை வங்கிகள் வெளியில் சொல்ல ஆரம்பித்தன. இந்த மோசடியில், வங்கி அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில், நிரவ் மோடி இங்கிலாந்தில் பதுங்கி இருந்ததையடுத்து அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என்று மத்திய அரசு இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்துவந்தது. நிரவ் மோடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், இந்தியாவில் விசாரணை நடைபெற்றால், நியாயமான முறையில் நடக்காது என்று வாதம் வைக்கப்பட்டது. ஆனால் இவ்வழக்கில் தீர்ப்பளித்த இங்கிலாந்து நீதிமன்றம், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடுகடத்த உத்தரவிட்டது. இதையடுத்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதேசமயம் அவர் மோசடி செய்த வங்கிக் கிளை மும்பையில் இருப்பதால், அவரை மும்பைக்குக் கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள்.

நிரவ் மோடி
நிரவ் மோடி

மும்பையிலுள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர். ஆர்தர் ரோடு சிறையில் ஏற்கெனவே வி.ஐ.பி-க்களுக்காக பிரத்யேக பிளாக் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இதில் வெஸ்டர்ன் கழிவறை, டி.வி., கண்காணிப்பு கேமரா, மெத்தை, போதிய வெளிச்சம் போன்ற அனைத்து வசதிகளும் இருக்கும். ஏற்கெனவே விஜய் மல்லையாவை நாடுகடத்திக்கொண்டு வரும்போது, அங்கு அவரை அடைக்க ஓர் அறை தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. பிளாக்கில் மொத்தம் மூன்று அறைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றில்தான் நிரவ் மோடி அடைக்கப்படவிருக்கிறார். நிரவ் மோடி நாடுகடத்திக் கொண்டு வரப்பட்டால் அவரை அடைக்க வி.ஐ.பி அறை தயார்நிலையில் இருப்பதாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அறை மும்பை தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப்பை அடைக்க பிரத்யேகமாகக் கட்டப்பட்டது. பலத்த பாதுகாப்போடு சிறை கண்காணிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள சிறைகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று கூறித்தான் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் தன்னை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று வாதிட்டார் என்பது குறிப்பிடத்த்தக்கது. அதன் பிறகு ஆர்தர்ரோடு சிறையில் வி.ஐ.பி-க்களுக்காகக் கட்டப்பட்டிருக்கும் சிறை அறையை வீடியோ எடுத்து லண்டன் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்தனர். அப்படி இருந்தும், தான் இங்கிலாந்து பிரஜை என்பதால் தன்னை இந்தியாவுக்கு நாடுகடத்த முடியாது என்று மல்லையா வாதிட்டார்.

 மெஹுல் சோக்சி
மெஹுல் சோக்சி

நிரவ் மோடியும் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் கைதுசெய்யப்பட்ட பிறகு, பல காரணங்களைக் கூறி ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். ஆனால், ஜாமீன் கொடுக்கப்படவில்லை. இப்போதும் கோர்ட் நிரவ் மோடியை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளபோதிலும், உடனடியாக அது நடக்குமா என்பது சந்தேகமே என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு