Published:Updated:

`சரக்கு லாரியில் திரும்பிய மக்கள்; மதுகேட்ட டான்ஸர்கள்!'- கொரோனா தொற்றால் அதிர்ச்சியில் போலீஸார்

க்வாரன்டீனில் மதுகேட்கும் டான்ஸர்கள்
க்வாரன்டீனில் மதுகேட்கும் டான்ஸர்கள்

மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசம் திரும்பிய 72 பேர் தனியார் மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சரக்கு வாகனங்கள் மாநிலங்களுக்கிடையே செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மும்பையில் தவித்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மும்பையிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு 70-க்கும் மேற்பட்டவர்கள் சரக்கு வாகனங்களில் வந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறி தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் சரக்கு வாகனத்தில் வந்த 72 பேரையும் பரேலி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

ஊரடங்கு
ஊரடங்கு

வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்காகத் தனியார் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர். மும்பையிலிருந்து திரும்பியவர்களில் பார் ஊழியர்கள் மற்றும் பாரில் நடனமாடும் பெண்களும் அடங்குவர்.

மும்பையில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கை இன்னும் வரவில்லை. தற்போது அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

பார் ஊழியர்கள் மற்றும் நடனப் பெண்கள் தங்களுக்குக் குடிப்பதற்கு மது வேண்டும் என சுகாதாரப் பணியாளர்களிடம் கேட்டுள்ளனர். இதற்கு சுகாதாரப் பணியாளர்கள் மறுப்பு தெரிவிக்கவே மருத்துவமனை வளாகத்தில் நடனமாடி மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். அதேபோல் நடனமாடும் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய சுகாதார ஊழியர்கள், ```மது கொடுக்காததால் பார் டான்ஸர்கள் வராண்டாக்களில் நடனமாடத் தொடங்கினர். அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளையும் எங்களையும் பார்த்துக் கிண்டல் செய்தனர். அவர்கள் இங்கு இருப்பதற்கு விரும்பவில்லை. எங்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்கின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. தனிமைப்படுத்தப்படும் காலம் முடியாமல் அவர்கள் யாரையும் வீட்டுக்கு அனுப்ப முடியாது” என்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரிகள், ``மொராபாபாத் பகுதியில் இரவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மும்பையிலிருந்து வந்த சரக்கு வாகனத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 72 பேர் இருந்தனர். வாகனத்தைப் பறிமுதல் செய்து உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் அதிகம் இருந்ததால் அவர்களுடன் பெண் போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 5 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் கொரோனா வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். வேலையில் இருந்த அரசு ஊழியர்களைத் தொந்தரவு செய்தது, நோய்த் தொற்று பரவும்விதமாக நடந்துகொண்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடனமாடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு