Published:Updated:

மும்பை: விடாது கொட்டித்தீர்க்கும் பருவமழை; மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை!

சாலையில் இடுப்பளவு தண்ணீர்
சாலையில் இடுப்பளவு தண்ணீர்

மும்பையில் நேற்று இரவிலிருந்து மழை விடாமல் பெய்துவருகிறது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்று மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டிருக்கிறது.

மும்பையில் சனிக்கிழமை இரவிலிருந்து தொடர்ந்து மழை பெய்துவருகிறது. சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை எப்போதும் இல்லாத அளவுக்கு மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழைக்கு 33 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கிறார்கள். இந்த மழை ஞயிற்றுக்கிழமை இரவும் தொடர்ந்து பெய்தது. திங்கள்கிழமை காலையில் சிறிது நேரம் ஓய்ந்திருந்த மழை, மீண்டும் பெய்யத்தொடங்கி விடாமல் பெய்துகொண்டிருக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவை சிறிது நேரம் தொடங்கப்பட்டு, பின்னர் மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டது. பாண்டூப் மற்றும் விக்ரோலி இடையே ரயில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியது. தானே ரயில்வே கார் ஷெட்டிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் ரயில்களை கார்ஷெட்டிலிருந்து வெளியில் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது. நகரின் முக்கியச் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாலாசோபாராவில் சாக்கடைக் குழியில் விழுந்த 4 வயது சிறுவனை இன்னும் மீட்க முடியவில்லை.

சாலையில் வெள்ளப்பெருக்கு
சாலையில் வெள்ளப்பெருக்கு
மும்பை: தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர்; திடீரென புறப்பட்ட ரயில்! - மீட்ட ரயில்வே ஊழியர்கள்

உல்லாஸ் நகரிலும் சாக்கடையில் விழுந்து 4 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். மும்பையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. மும்பை மட்டுமல்லாமல் நவி மும்பையிலும் மழை விடாமல் பெய்துவருகிறது. நவி மும்பையில் 24 மணி நேரத்தில் 1,600 மி.மீ அளவுக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்த்துள்ளது. ரபாலே ரயில் நிலையம் அருகே இருந்த ஒரு கட்டடத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தக் கட்டடத்தில் இருந்த 80 வயது முதியவர் உட்பட 70 பேர் கட்டடத்தின் மாடிக்குச் சென்று தங்களை பாதுகாத்துக்கொண்டனர். அவர்கள் உதவி கேட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். 10 தன்னார்வலர்கள், 250 அடிக் கயிற்றைக் கட்டி அனைவரையும் பத்திரமாக மீட்டனர். கழுத்து அளவுக்கு தண்ணீர் சேர்ந்துவிட்டது. மூன்று மணி நேரம் போராடி 80 வயது முதியவர் முதல் மூன்று மாதக் குழந்தை என அனைவரும் மீட்கப்பட்டனர். திங்கள்கிழமை தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தது. மீனவர்கள் 22-ம் தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டிருக்கிறது. பழுதடைந்த கட்டடத்தில் வசிப்பவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்கும்படி முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு