Published:Updated:

மும்பை:குணமடைந்தவர்களிடம் மீதமிருக்கும் மருந்து... கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கும் டாக்டர் தம்பதி!

மும்பையில் டாக்டர் தம்பதியர் குணமடைந்த கொரோனா நோயாளிகளிடம் இருக்கும் பயன்படுத்தப்படாத மருந்தை வாங்கி, தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கிவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாட்டிலேயே அதிக கொரோனா தொற்றைக்கொண்டிருந்த மகாராஷ்டிரா இப்போது படிப்படியாக அதிலிருந்து விடுபட்டுவருகிறது. மும்பை ஓரளவுக்கு கொரோனாவிலிருந்து விடுபட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் பலர் மருந்து கிடைக்காமல் திண்டாடிவருகின்றனர். அவர்களுக்கு மும்பையைச் சேர்ந்த ஒரு டாக்டர் தம்பதியர் உதவி செய்துவருகிறார்கள். டாக்டர் மார்கஸ் ரேன்னியும், அவரின் மனைவி டாக்டர் ரெய்னாவும் சேர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்தவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் மருந்தை வாங்கி, தேவைப்படும் ஏழை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கிவருகின்றனர்.

டாக்டர் தம்பதி
டாக்டர் தம்பதி

இது குறித்து டாக்டர் மார்கஸ் கூறுகையில், ``கொரோனா பாதித்து சிகிச்சை முடிந்தவர்களிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் மருந்தை வாங்கி, தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்கும் திட்டத்தை கடந்த 1-ம் தேதியிலிருந்துதான் தொடங்கினோம். குடியிருப்பு கட்டடங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கொரோனா மருந்தைச் சேகரித்து அதைத் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்துவருகிறோம்” என்றார்.

இது குறித்து டாக்டர் ரெய்னா கூறுகையில், ``என்னிடம் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களுக்கு மருந்து தேவைப்பட்டது. ஆனால் கொரோனா சிகிச்சை மருந்துகள் அதிக கட்டணத்தில் விற்கப்படுகின்றன. அந்தநேரத்தில் கொரோனாவிலிருந்து சிலர் குணமடைந்தனர். உடனே அவர்களிடம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் மருந்தை வாங்கிக் கொடுக்க முடிவு செய்தோம். அதன் பிறகு பக்கத்துக் கட்டடங்களில் வசிக்கும் எட்டு பேரின் உதவியுடன் தனி கமிட்டி ஒன்றை அமைத்து வெளியில் மருந்து வாங்க முடியாத கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கிவருகிறோம்” என்றார். இந்தத் தம்பதியர் கடந்த 10 நாள்களில் இதுவரை 20 கிலோவுக்கும் அதிகமான மருந்தைச் சேகரித்துள்ளனர்.

இந்த மருந்துகள் அனைத்தும் கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார மையத்துக்கு வழங்கப்படும். தற்போது 100 குடியிருப்பு கட்டடங்களுடன் டாக்டர் தம்பதி ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டடங்களில் யாருக்காவது கொரோனா ஏற்பட்டு குணமடைந்திருந்தால் அவர்கள் பயன்படுத்தாமல் இருக்கும் மருந்தை நேரடியாக டாக்டர் தம்பதிக்கு அனுப்பிவிடுகின்றனர். இதுவரை சேகரித்த மருந்தை பேக்கிங் செய்து தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளனர். இந்தச் சேவை திட்டத்துக்கு `மெட்ஸ் ஃபார் மோர்’ என்று பெயரிட்டுள்ளனர். மருந்து மட்டுமல்லாமல், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களையும் சேகரித்துவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே போன்று மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொரோனா பாதித்தவர்களை தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்துச் செல்கிறார். கொரோனா ஆரம்பித்ததிலிருந்து இது வரை 15,000 பேரைத் தனது ஆட்டோவில் இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருப்பதாக ஜிதேந்திர ஷிண்டே தெரிவித்துள்ளார். அதில் ஆயிரம் பேர் கொரோனா அறிகுறியுள்ளவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ``கொரோனா நோயாளிகளுக்கு ஆட்டோ ஓட்டுவதால் என்னிடம் யாரும் வரவே பயப்படுவார்கள். எந்த நோயாக இருந்தாலும் அவர்களை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். இதற்காக தினமும் எனக்கு போனில் அழைப்பு வந்துகொண்டேதான் இருக்கிறது.

ஆட்டோ டிரைவர் ஷிண்டே
ஆட்டோ டிரைவர் ஷிண்டே

நாட்டில் முதன்முறையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட 2020 மார்ச் 24-ம் தேதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துவருகிறேன். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்பவர்களிடம் முதலில் என்ன பிரச்னை என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்குத் தக்கபடி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன். 70 கர்ப்பிணி பெண்களை ஓராண்டில் இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறேன்” என்று சொன்னார். இலவசமாக ஆட்டோ ஓட்டுவதோடு மட்டுமல்லாமல், தேவைப்படும் நோயாளிகளுக்காக இதுவரை தனது சொந்தப் பணம் 1.50 லட்சத்தையும் செலவு செய்திருப்பதாகக் குறிப்பிட்டார். `யாரும் எனக்கு உதவி செய்வதில்லை. நானும் எதிர்பார்ப்பதில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு