Election bannerElection banner
Published:Updated:

`குட்பை, இனி உங்களை சந்திக்காமலேயே போகலாம்!' - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட டாக்டர் கொரோனாவால் மரணம்

Representational Image
Representational Image

'இது எனது இறுதி காலை வணக்கமாக இருக்கலாம். இந்தத் தளத்தில் இனி உங்களை சந்திக்காமல் போகலாம். கவனமாக இருங்கள், உடல்கள் இறக்கலாம். ஆனால், ஆன்மாவுக்கு இறப்பு இல்லை'

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு இதுவரை 60,000 பேர் வரை உயிரிழந்துவிட்டனர். மும்பையில் தினமும் 50 பேர் வரை கொரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர். இதுவரை மும்பையில் மட்டும் கொரோனாவுக்கு 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் முன்களப் பணியாளர்களும் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள சிவ்ரி மாநகராட்சி காசநோய் மருத்துவமனை டாக்டரான மனிஷா ஜாதவ்க்கு (51) கடந்த சில நாள்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் காந்திவலியில் உள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தார். மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே அவரது ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்தது. கொண்டு வந்தவுடன் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சிகிச்சையளித்தனர். அவருக்கு ரெம்டெசிவிர் உட்பட அனைத்து வகையான மருந்தையும் கொடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர்.

corona virus
corona virus
Pixabay

ஆனால், அவரது நுரையீரல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தபோது தனது ஃபேஸ்புக் போஸ்ட்டில் அவர், 'இது எனது இறுதி காலை வணக்கமாக இருக்கலாம். இந்தத் தளத்தில் இனி உங்களை சந்திக்காமல் போகலாம். கவனமாக இருங்கள், உடல்கள் இறக்கலாம். ஆனால், ஆன்மாவுக்கு இறப்பு இல்லை' என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் இதை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட 36 மணி நேரத்தில் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்து போனார்.

சிவ்ரி மருத்துவமனையில் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த ஜாதவ் எந்த நேரத்திலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தயங்கியதே இல்லை என்று அவருடன் பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தெரிவித்தனர். கடைசியாக மனிஷா கடந்த 12-ம் தேதி பணிக்கு வந்தார். அடுத்த இரண்டு நாள்கள் விடுமுறை. ஆனால் 15-ம் தேதி அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது மரணம் அவருடன் பணியாற்றியவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மனிஷாவின் கணவரும் மருத்துவர். அவருக்கு லேசான கொரோனா தொற்று இருந்தது. அவர் கொரோனா தடுப்பூசி எடுத்து இருந்தார். ஆனால் மனிஷா அலர்ஜி உட்பட பல உடல் கோளாறு காரணமாக கொரோனா தடுப்பூசி எடுக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையே மும்பையைச் சேர்ந்த பெண் டாக்டர் திருப்தி கிலாடா வெளியிட்டுள்ள வீடியோவில், ``கொரோனா தொற்று உங்களுக்கு ஏற்படவில்லையெனில் நீங்கள் சூப்பர் ஹீரோ என்று நினைக்க வேண்டாம். வயது குறைவான அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதைக் காணமுடிகிறது. அவர்களுக்கு எங்களால் உதவ முடியவில்லை. 35 வயதுக்கு உட்பட்டவர்கள் கூட வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு எப்படி உதவுவது என்று தெரியாமல் இருக்கிறோம். இது போன்ற ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது என்று நினைக்கிறோம்.

கொரோனா எல்லா இடத்திலும் இருக்கிறது. வீட்டைவிட்டு எங்கு, என்ன காரணத்துக்குச் சென்றாலும் முகக்கவசம் அணிந்து கொண்டு செல்லுங்கள். முகக்கவசம் மூக்கை முழுவதும் மூடியதாக இருக்க வேண்டும்'' என்று அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Screenshot of Doctor Manisha's post
Screenshot of Doctor Manisha's post
Fb: Manisha

மகாராஷ்டிராவில் இது வரை 19,975 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 168 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் 747 டாக்டர்கள் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலைக்கு மகாராஷ்டிராவில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் கடந்த ஆண்டு 11 டாக்டர்கள் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ஆக்சிஜன் கட்டணம் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இதற்கு முன்பு 5 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் ரூ.3,000-லிருந்து ரூ.4,000 வரை விற்பனையானது.. இப்போது ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனையாகிறது. 10 லிட்டர் சிலிண்டர் இதற்கு முன்பு ரூ.5,000-லிருந்து ரூ.6,000 வரை விற்பனையானது. இப்போது அது ரூ.18,000-லிருந்து ரூ.20,000 வரை விற்பனையாகிறது. தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு