மும்பை மாநகரில், சிக்னலில் நின்ற கார்களுக்குப் பின்னால் ஓடி பூ விற்றுப் படித்த பெண் இன்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு முனைவர் பட்டம் பெற செல்கிறார். சரிதா மாலி என்கிற 28 வயதான பெண்தான் இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். பல சவால்களைக் கடந்து அவர் இன்று முனைவர் பட்டம் பெறவிருக்கும் கதை நெகிழ வைக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் ஒரு குடிசைப் பகுதியில் பிறந்தவர் சரிதா மாலி. வறுமையான சூழல் காரணமாக அவரது குடும்பம் பிழைப்புத் தேடி மும்பைக்கு வந்திருக்கிறது. அவரின் அப்பா பூ விற்பனை செய்து குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்தார்.

இப்படியான சூழலில் தனது 6-ம் வகுப்பிலிருந்து சிக்னலில் நிற்கும் கார்களுக்குப் பின்னால் ஓடி ஓடி தந்தைக்கு உதவியாக பூ விற்று வந்திருக்கிறார் சரிதா மாலி. மும்பை மாநகராட்சிப் பள்ளியில் படிப்பை முடித்த அவர், தனது பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் கற்றுக்கொடுத்து அதன் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாயைக் கொண்டு கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்திருக்கிறார். கே.ஜே சோமய்யா கல்லூரியில் இளங்கலை பயின்றவர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை இந்தி படித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஏழ்மை, நிறபேதம் உள்ளிட்ட பல நெருக்கடிகளைச் சந்தித்த அவர், இதிலிருந்து மீள்வதற்கு கல்வி ஒன்றே தீர்வு என்பதில் உறுதிபட நின்றிருக்கிறார். அந்த உறுதி அவரை ஆராய்ச்சி மாணவியாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற இப்போது தகுதிப்படுத்தியுள்ளது. சரிதாவுக்கு ஒரு சகோதரி மற்றும் இரு சகோதரர்கள் உள்ளனர். அவர்கள் இன்று, குடிசைப்பகுதிக் குழந்தைகளுக்கு டியூஷன் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர்.

கலிஃபோர்னியா பல்கலையில் முனைவர் பட்டம் பெற தேர்வாகியிருக்கும் சரிதா, "இன்றைக்கும் சிக்னலில் கார்களுக்குப் பின்னால் ஓடி பொருள்கள் விற்கும் குழந்தைகளைப் பார்க்கிறேன். அது எனது குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. இவர்களது எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்வியும் பிறந்தது. ஆகவே, குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி கொடுக்க என்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படவிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஆம், நல்ல கல்வி மட்டுமே வளமான எதிர்காலத்தை உருவாக்கும்.