Published:Updated:

"எத்தனை ஆண்டுகள் விசாரணையின்றி விசாரணைக் கைதிகள் சிறையில் இருக்க முடியும்"- மும்பை ஐகோர்ட் கேள்வி!

மும்பை
மும்பை

'பீமா-கோரேகான் வழக்கில் எத்தனை ஆண்டுகள் விசாரணைக் கைதிகள் எந்தவித விசாரணையும் இன்றி சிறையில் இருக்க முடியும்' என்று என்.ஐ.ஏ- விடம் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவிலுள்ள பீமா-கோரேகானில் 2018-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி நடந்த கலவரம் மற்றும் அதற்கு முதல் நாள் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும்விதத்தில் பேசியது தொடர்பான வழக்கை, தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ விசாரித்துவருகிறது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட அனைவரும் எந்தவித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் என்.ஐ.ஏ.விசாரணைகூட நடத்தாமல் வெறுமனே சிறையில் அடைத்திருக்கிறது; அவ்வாறு அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி சமீபத்தில் மும்பைச் சிறைக்காவலில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டபோது உயிரிழந்தார். சிறையில் சரியான முறையில் சிகிச்சை கொடுக்காமல் இருந்ததால், அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார் என சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது.

மும்பை ஐகோர்ட்
மும்பை ஐகோர்ட்

பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி மருத்துவக் காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது தீர்ப்பு கொடுக்கும் முன்பாகவே ஸ்டேன் ஸ்வாமி இறந்துவிட்டார். அந்த மனு இன்று (திங்கள்கிழமை) நீதிபதி சாம்பாஜி ஷிண்டே, நிஜாமூதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள்.``பீமா-கோரேகான் வன்முறை வழக்கில் சமூக ஆர்வலர்கள், முதியோர்கள் எனப் பலர் கைதுசெய்யப்பட்டு, எந்தவித விசாரணையும் இன்றி, குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்யாமல் எத்தனை ஆண்டுகளுக்கு அவர்களைச் சிறையில் வைத்திருக்க முடியும் " என்று தேசியப் புலனாய்வு விசாரணை ஏஜென்சியிடம் கேள்வி எழுப்பினர்.

``பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமி மீதும், அவரது சேவைகள் மீதும் இந்த கோர்ட் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறது. ஸ்டேன் ஸ்வாமிக்கு மருத்துவச் சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டிருந்தோம். எங்களால் கோர்ட்டுக்கு வெளியில் எதையும் பேச முடியாது. உங்களது கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்பதை நீங்கள் (சாமி வழக்கறிஞர்) வெளியில் விளக்கமளிக்கலாம். எழுத்தாளர் வரவரராவுக்கு இந்த வழக்கில் மருத்துவ ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரின் மனுக்களையும் மனிதாபிமானத்துடன்தான் பரிசீலித்தோம். வரவரராவுக்கு ஜாமீன் கொடுக்கும்போதுகூட கடுமையான எதிர்ப்பையும் மீறித்தான் ஜாமீன் கொடுத்தோம். அதோடு அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் சந்தித்துப் பேச அனுமதித்தோம். சாமி மிகவும் அற்புதமான மனிதர். இந்த சமுதாயத்துக்கு அளப்பரிய சேவையை வழங்கியிருக்கிறார். அவரது சேவைமீது நாங்கள் மிகவும் மரியாதை வைத்திருக்கிறோம்’’ என்று நீதிபதி ஷிண்டே தெரிவித்தார்.

மும்பை: விடாது கொட்டித்தீர்க்கும் பருவமழை; மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை!
ஸ்டேன் லூர்து ஸ்வாமி
ஸ்டேன் லூர்து ஸ்வாமி
Khetfield59, CC BY-SA 4.0 via Wikimedia Commons

ஸ்வாமி இறந்தது குறித்து நடத்தப்படும் நீதிமன்ற விசாரணையில் பாதிரியார் மாஸ்கர்ன்ஹாஸ் பங்கேற்கவும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. என்.ஐ.ஏ சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சந்தேஷ் பாட்டீல், ``மக்கள் நீதித்துறையுடன், சிறை மற்றும் விசாரணை ஏஜென்சியைக் குறை கூறுகின்றனர்" என்று தெரிவித்தார். உடனே கருத்து தெரிவித்த நீதிபதி ஷிண்டே, ``வெளியில் பேசுபவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. இப்போது எந்த விசாரணையும் இன்றி, விசாரணைக் கைதிகள் எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்க முடியும் என்பதை என்.ஐ.ஏ.தெளிவுபடுத்த வேண்டும். பீமா-கோரேகான் வழக்கு மட்டுமல்லாமல் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்துத்தான் கேட்கிறோம். பீமா-கோரேகான் வழக்கில் குற்றச்சாட்டுக்கள்கூட பதிவு செய்யப்படவில்லை. விரைவான விசாரணை என்பது அடிப்படை உரிமை. நாங்கள் இந்த உண்மையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. நான் பொதுவாக டி.வி பார்ப்பது, பேப்பர் படிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவது கிடையாது. ஆனால் ஸ்டேன் ஸ்வாமியின் இறுதிச்சடங்கை பார்த்தனே் " என நீதிபதி ஷிண்டே தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு