Published:Updated:

`கொரோனா வார்டில் குறைந்த அளவில் தனிமனித இடைவெளி’ -மும்பை மருத்துவமனைகளில் அதிரடி மாற்றம்

மும்பை
மும்பை ( AP )

மும்பையில், வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அங்குள்ள கொரோனா வார்டுகளில் குறைந்த தனிமனித இடைவெளியுடன் அதிக படுக்கைகள் நிரப்பப்படுகின்றன.

இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அதிலும், குறிப்பாக மும்பை மாநகரில் வைரஸின் பரவல் நாளுக்குநாள் உச்சத்தை அடைந்துவருகிறது. மொத்த மகாராஷ்டிராவிலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,000-க்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 975 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் மும்பையில் மட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,781 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 556 ஆகவும் உள்ளது.

மும்பை
மும்பை

மும்பையில், கொரோனா நோயாளிகளுக்காக 3,500 படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், படுக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றன. மும்பையின் அனைத்து மருத்துவமனைகளையும் சேர்த்து, நாள் ஒன்றுக்கு குறைந்தது 500 முதல் 1000 நோயாளிகள் வரை புதிதாக அனுமதிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் மும்பை மருத்துவமனைகளில் படுக்கைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. படுக்கைகள் இருந்தாலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் காரணத்தால் இடவசதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடப் பற்றாக்குறையைச் சரிசெய்ய, மும்பை மாநகராட்சி ஒரு முடிவெடுத்துள்ளது.

`சோர்வில் காவலர்கள்; ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் மும்பை?!’ -லாக்டெளன் குறித்து  உத்தவ் தாக்கரே

அதாவது, அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள கொரோனா வார்டுகளில், மிகவும் குறைந்த அளவிலான தனிமனித இடைவெளியுடன் படுக்கைகள் நிரப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இப்படி நகரம் முழுவதும் கூடுதலாக 2000 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஒரு மருத்துவமனையில் ஏற்கெனவே 336 படுக்கைகள் இருந்த கொரோனா வார்டு, தற்போது 800 படுக்கைகள் கொண்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், பல மருத்துவமனைகளிலும் குறைந்த தனிமனித இடைவெளியுடன் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா வார்டில் இருக்கும் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அங்கு அதிக தனிமனித இடைவெளி தேவையில்லை’ என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மும்பை
மும்பை
AP

மேலும், பலருக்கு அவசர சிகிச்சை வழங்க வேண்டியிருப்பதால் வென்டிலேட்டர்களுக்கும் மிகுந்த பற்றாக்குறை நிலவுகிறது. தற்போது, மும்பையில் இருக்கும் அனைத்து வென்டிலேட்டர் படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், தனியார் மருத்துவமனைகள் அரசின் உதவியை நாடியுள்ளன.

மும்பையில் மிகவும் நெருக்கமாக மக்கள் வாழ்வதே அங்கு கொரோனா வேகமாகப் பரவுவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மொத்த இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதத்தில், மும்பையில் மட்டும் 21% பேர் உயிரிழந்துள்ளனர். இது, மகாராஷ்டிராவுடன் ஒப்பிடுகையில் 60 சதவிகிதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News Credits - NDTV

`கொரோனா வார்டில் சடலங்களுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை?’ - மும்பை சியான் மருத்துவமனையின் திகில் காட்சி
அடுத்த கட்டுரைக்கு