Published:Updated:

`கொரோனாவால் மட்டும் அவர் சாகவில்லை!' -இறக்கும்முன் மும்பை முதியவர் குடும்பத்துடன் சந்தித்த துயரம்

கொரோனா
கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மும்பை முதியவரும் அவரது குடும்பத்தினரும் சமூகத்தால் பெரும் மன உளைச்சலைச் சந்தித்துள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று மொத்த உலக நாடுகளுக்கும் பெரும் வில்லனாக மாறி விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இந்த வைரஸால் இந்தியா உட்பட பல நாடுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 147 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்நிலையில் வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது. முதலில் கர்நாடகா மற்றும் டெல்லியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் மூன்றாவதாக தற்போது மும்பையைச் சேர்ந்த 63 வயது முதியவரும் வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளார். மத்திய மும்பையில் உள்ள காட்கோபர் பகுதியைச் சேர்ந்தவர் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி துபாய் சென்றுவிட்டு இந்த மாதம் 5-ம் தேதி மும்பைக்குத் திரும்பியுள்ளார்.

கொரோனா தாக்கிய பயணிகள்... தடுமாறிய கப்பல்... கியூபா அரசு காட்டிய `மனித நேயம்'!

அதன் பிறகு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து கடந்த 13-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு கஸ்தூரிபா மாநகராட்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணிக்கு மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

உயிரிழந்த முதியவரின் மனைவி மற்றும் மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களும் அதே கஸ்தூரிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ‘அந்த முதியவர் வைரஸ் தொற்றால் மட்டும் உயிரிழந்தார் என்று கூறிவிட முடியாது. அவருக்கு ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், தசைவீக்கம் போன்ற நோய்கள் இருந்தன மற்றும் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இருந்த அவரின் இதயத்துடிப்பு உயிரிழப்பதற்கு முன் அதிகமாக இருந்தது” என்று மும்பை மாநகராட்சியின் கமிஷனர் ப்ரவின் பர்தேசி தெரிவித்துள்ளார்.

`2 நாளாக உணவில்லை; நடுரோட்டில் இறக்கிவிடும் அவலம்!' -கேரள மக்களுக்கு பினராயி `மனிதநேய' அறிவுரை

இதற்கிடையில் அந்த முதியவருக்குக் கொரோனா தொற்று உறுதியானது முதல் இறக்கும் வரை அவர் சமூகத்தில் பலவிதமான மன உளைச்சல்களைச் சந்தித்துள்ளார். ``அவருக்கு வைரஸ் தொற்று உறுதியான பிறகு தன் நெருங்கிய உறவினர்கள் முதல் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் வரை எனப் பலரின் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தார். அவர்தான் வைரஸைப் பரப்பியதாகப் பலரும் கடுமையாகக் குற்றம் சாட்டினர்.

முதியவர் உயிரிழப்பதற்கு முன்னதாகவே அவர் இறந்துவிட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவின. அந்த மெசேஜ் அந்த முதியவருக்கே சென்றுள்ளது. இறப்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக அவருக்கே மெசேஜ் சென்றால் அந்த நேரத்தில் முதியவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தனர்” என்று முதியவரின் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறப்பு
இறப்பு

முதியவர் பற்றிப் பரவிய வதந்தியால் அவரது மகளும் பேரக்குழந்தைகளும் அவர்களின் பள்ளி மற்றும் வெளியிடங்களில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டுள்ளனர். உயிரிழந்த முதியவர் காட்கோபர் பகுதியில் கடந்த 20 வருடங்களாக தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு வைரஸ் உறுதியான தகவல் வெளியில் கசிந்ததும் வீட்டு வேலை செய்பவர்கள் முதல் பால், காய்கறி விற்பனை செய்பவர்கள் வரை அனைவரும் அவர் இருந்த குடியிருப்புக்கே வரப் பயந்துள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் 460 குடும்பங்கள் பெரும் சிரமமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு