Published:Updated:

பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட 16 வயது சிறுமி... சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ஐ.ஜி!

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட டி.ஐ.ஜி
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட டி.ஐ.ஜி

போக்ஸோ சட்டம் பாய்ந்தாலும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டாலும், பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய டி.ஐ.ஜி முதல் சாதாரண மனிதர்கள் வரை பெண் சமுதாயத்துக்குக் கொடுமைகளை இழைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

என்னதான் சட்டம் போட்டாலும் பாலியல் வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. நாட்டில் தொடர்ந்து பாலியல் அக்கிரமங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மகாராஷ்டிரத்தில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டி.ஐ.ஜி ஒருவரே தலைமறைவாக இருக்கிறார். கேரளாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால், பெற்றோருடன் சேர்ந்து சிறுமி தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் டி.ஐ.ஜி-யாக இருப்பவர் நிஷிகாந்த் மோர். கடந்த ஜூன் மாதத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டபோது, 17 வயது இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து போலீஸில் அந்தப் பெண் புகார் கொடுத்தார். போலீஸார், புகாரை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். சம்பவம் நடந்து 6 மாதம் கழித்து டிசம்பர் 26-ம் தேதி நவிமும்பை போலீஸில் டி.ஐ.ஜி நிஷிகாந்த் மோர் மீது வழக்கு பதியப்பட்டது. இதனால், தான் கைது செய்யப்படலாம் என்று அஞ்சிய நிஷிகாந்த் மோர் தலைமறைவானார். இரண்டு வார காலமாக அவர் தலைமறைவாகவே உள்ளார். இதற்கிடையே, முன்ஜாமீன் பெற பன்வெல் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்றம் மனுவை, தள்ளுபடி செய்து அவரை கைது செய்ய உத்தரவிட்டது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள்
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள்

டி.ஐ.ஜி தரப்பிலிருந்து புகாரை வாபஸ் வாங்குமாறு அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு தொடர்ந்து மிரட்டல் வந்துள்ளது. டி.ஐ.ஜியுடன் பணியாற்றிய போலீஸ் கான்ஸ்டபிள் தின்கர் சால்வே என்பவர், அந்தப் பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரைச் சந்தித்து 'வழக்கை வாபஸ் வாங்கவில்லையென்றால் கொலை செய்யப்படுவீர்கள்' என்று மிரட்டியுள்ளார். இதற்கிடையே, ரயிலில் குதித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு சிறுமி வெளியேறியுள்ளார். அதற்குப் பிறகு, அவர் வீடு திரும்பவில்லை. டி.ஐ.ஜி ஆதரவாளர்கள் அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றிருப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

பெல், செயில், என்.எல்.சி இனி தனியாருக்கு... பி.ஜே.பியின் முடிவை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்!

குற்றச்சாட்டுக்குள்ளான போலீஸ் டி.ஐ.ஜி மீது மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிஷிகாந்த் மோர் அவருக்கு உதவியாக இருந்த டிரைவர் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் தின்கர் சால்வே ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மகாராஷ்டிர மாநில டி.ஜி.பி-க்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

வேலியே பயிரை மேய்வது போல நடந்துள்ள இந்தச் சம்பவம் மகாராஷ்டிர காவல்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளாவில் நடந்த மற்றொரு சம்பவம் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. கோட்டயத்தை அடுத்த மூவாத்துப்புழா பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியை வயிற்றுவலி காரணமாகப் பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்கைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனை நிர்வாகமே போலீஸில் புகார் அளித்தது.

கைது செய்யப்பட்ட ஜிஷ்ணு
கைது செய்யப்பட்ட ஜிஷ்ணு

போலீஸ் விசாரணையில் ஜிஷ்ணு என்ற 20 வயது இளைஞர் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக சிறுமி கூறியுள்ளார். தொடர்ந்து, ஜிஷ்ணு போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, அவமானம் அடைந்ததாகக் கருதிய சிறுமியின் பெற்றோர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். உறக்கம் கலைந்து எழுந்து பார்த்த சிறுமி பெற்றோர், தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கதறியழுத சிறுமி தன் சகோதரிக்கு போன் செய்து விஷயத்தைக் கூறியுள்ளார். போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்குச் சென்றபோது, அந்தச் சிறுமியும் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. மூன்று பேரின் சடலங்களும் கைப்பற்றப்பட்டு உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இரு வருடங்களுக்கு முன் சிறுமியின் மூத்த சகோதரி பெற்றோரை எதிர்த்து தான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனால் உறவினர்கள், நண்பர்களிடத்தில் இருந்து சிறுமியின் குடும்பம் ஒதுங்கியே இருந்துள்ளது. இந்த நிலையில், சிறுமியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் பெற்றோர் கடும் மனவேதனையில் இருந்துள்ளனர். கடைசியாக அதீத மன உளைச்சல் காரணமாகப் பெற்றோர் தற்கொலை செய்துவிட்டனர். தொடந்து சிறுமியும் உயிரை மாய்த்துக் கொண்டார். இளைஞர் ஒருவரின் மிருகத்தனமான செயல் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரை பறித்துள்ள சம்பவத்தால் அக்கம் பக்கத்தினர் கடும் வேதனையடைந்துள்ளனர்.

குழந்தைகள் பாலியல் வன்முறை
குழந்தைகள் பாலியல் வன்முறை

பாலியல் வன்கொடுமை காரணமாக குடும்பமே தற்கொலை செய்துகொண்டுள்ளது கேரளாவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், ''எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது. இது போன்ற இக்கட்டான சூழலில் பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை மன நல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பெற்றோரும் மன நல ஆலோசகரின் அறிவுரையை பெற்றுக்கொள்வது நல்லது'' என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு