Published:Updated:

கொரோனாவால் தாயை இழந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால்; உதவிக்கரம் நீட்டும் பெண்!

ரோனிதா சர்மா
ரோனிதா சர்மா ( Twitter Image: @ronitasharma )

``எனது பதிவை பார்த்துவிட்டு, மேலும் பல தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்ய முன்வந்துள்ளனர். நான் மும்பை வந்த பிறகும், தேவைப்படும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன்."

கொரோனாவால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது தாயையோ தந்தையையோ, இருவரையும் இழந்துள்ளனர். அவர்களில் சிலர் தாய்ப்பால் குடிக்கும் வயதிலிருக்கும் குழந்தைகள். அப்படி கொரோனாவால் தாயை இழந்த குழந்தைகளுக்கு, மும்பையைச் சேர்ந்த ரோனிதா சர்மா என்ற பெண் தாய்ப்பால் கொடுத்து உதவி வருகிறார். இது குறித்து ரோனிதா சர்மா கூறுகையில், ``நான் மும்பையில் இருந்து பிரசவத்துக்காக கவுகாத்திக்கு வந்தபோது, அம்மாவை இழந்த, டெல்லியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் தேவை என்று சமூக வலைதளத்தில் பார்த்தேன்.

ரோனிதா சர்மா
ரோனிதா சர்மா
Twitter Image: @ronitasharma

அதன் பிறகுதான் கவுகாத்தியிலும் இது போன்ற குழந்தைகள் அதிகமாக இருக்கின்றனர் என்று தெரிந்துகொண்டேன். டெல்லி குழந்தைக்கு என்னால் உதவ முடியாமல் போனாலும், கொரோனாவால் தாயை இழந்த மற்ற குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடிவு செய்தேன்.

இதற்காக ட்விட்டரில் ஒரு பதிவு போட்டேன். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. என்னால் கொரோனாவால் தாயை இழந்த குழந்தைகளை உடனடியாகக் கண்டுபிடிக்க முடியாது என்பதால், என் குழந்தைக்குப் பாலூட்டிய பின், என் தாய்ப்பாலை சேமித்து, அதை தாய்ப்பால் வங்கி ஒன்றுக்கு கொடுத்துவிடுகிறேன். அவர்கள் தேவைப்படும் குழந்தைகளுக்குக் கொடுப்பார்கள்.

எனது பதிவை பார்த்துவிட்டு, மேலும் பல தாய்மார்கள் தாய்ப்பால் தானம் செய்ய முன்வந்துள்ளனர். நான் மும்பை வந்த பிறகும், தேவைப்படும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.

மும்பையில் சயான் திலக் மாநகராட்சி மருத்துவமனை, கே.இ.எம்.மருத்துவமனை, நாயர் மருத்துவமனை, காமா மருத்துவமனை ஆகியவற்றில் தாய்ப்பால் வங்கிகள் செயல்படுகின்றன. மகாராஷ்டிராவில் மட்டும் 5,000-க்கும் அதிகமான குழந்தைகள் கொரோனாவால் தங்களது பெற்றோரை இழந்துவிட்டனர் என்பது வேதனை தரும் செய்தி.

அடுத்த கட்டுரைக்கு