Published:Updated:

`எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது'-அயோத்தி தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு செய்யும் முஸ்லிம் அமைப்புகள்

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. பல ஆண்டுகளாக நிலவி வந்த அயோத்திப் பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த உத்தரவில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம். முஸ்லிம்கள் வழிபடுவதற்கு மாற்று இடமாக அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் கடும் கண்டனத்தை நீதிமன்றம் பதிவுசெய்தது. பாபர் மசூதி இருந்த பகுதி மூன்றாகப் பிரிக்கப்பட்டது செல்லாது எனவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

மவுலானா ஹசன் நத்வி
மவுலானா ஹசன் நத்வி

இந்நிலையில் இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அதன் செயற்குழுவை இன்று காலை கூட்டியது. லக்னோவில் நடந்த இந்தக்கூட்டத்தில் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா ஹசன் நத்வி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தீர்ப்பில் கூறிய சில அம்சங்களை மாற்றக்கோரி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மசூதிக்குப் பதிலாக எந்த நிலத்தையும் ஏற்க முடியாது என இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

``எப்படி வந்ததோ, அப்படியே திரும்பிப்போனது"- குப்பை சேகரிப்பவருக்குக் கிடைத்த லாட்டரியும் பாடமும்!

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மவுலானா ஹசன் நத்வி, ``எங்கள் சீராய்வு மனு 100% தள்ளுபடி செய்யப்படும் என்பதை நாங்கள் ஏற்கெனவே அறிந்திருந்தாலும், நாங்கள் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அது எங்கள் உரிமை.” என்றார்

ஜிலானி
ஜிலானி

இதுகுறித்து பேசிய சன்னி வக்ஃபு வாரிய வழக்கறிஞர் ஜிலானி, ``அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவுள்ளோம். வழிபடுவதற்கு மாற்று இடமாக அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலம் வழங்குவதை ஏற்க முடியாது. இது ஷரியத்துக்கு எதிரானது. ஷரியத்தின் படி மசூதி ஒரு இடத்தில் நிறுவப்பட்டால் அது அங்கேயேதான் இருக்க வேண்டும். வேறு இடத்தில் நிறுவுவதை ஷரியத் ஏற்றுக்கொள்ளாது. அது நிலம், பணம் அல்லது வேறு ஏதேனும் இருக்கலாம். மசூதிக்குப் பதிலாக எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார்.