Published:Updated:

`இதுதான் உண்மை; இது வாழ்க்கையின் இறுதி!'- இந்து பெண்ணின் சடலத்தை சுமந்துசென்ற இஸ்லாமியர்கள்

மலையரசு

இந்து பெண்ணின் சடலத்தை சுமந்துசென்று நெகிழவைத்துள்ளார்கள் இஸ்லாமியர்கள்.

சோனியின் சடலத்தை சுமந்துசெல்லும் இஸ்லாமியர்கள்
சோனியின் சடலத்தை சுமந்துசெல்லும் இஸ்லாமியர்கள்

மனிதத்துக்கு மதமில்லை... இந்த வாக்கியத்தை மெய்யாக்கியிருக்கிறது உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த சம்பவம். வாரணாசியைச் சேர்ந்த 19 வயது பெண் சோனி. சோனியின் தந்தை ஹேரிலால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். தாய் இதய நோயாளி. இருவராலும் எழுந்துநடக்க முடியாது. இதனால் குடும்பத்தை சோனியின் சகோதரர்தான் காப்பற்றிவந்துள்ளார். இதற்கிடையே, சமீபத்தில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட சோனி அதற்காக சிகிச்சை எடுத்துவந்தார்.

இறப்பு
இறப்பு

ஆனால், சிகிச்சை பலனளிக்காததால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார் சோனி. தனி ஆளாக இருந்த சோனியின் சகோதரரால் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய முடியவில்லை. இதைக் கேள்விப்பட்ட அவர் வீட்டருகில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் இறுதிச் சடங்கு செய்ய முன்வந்துள்ளனர். சிலர் நிதியுதவிகள் செய்ய, சிலர் களப்பணிகள் செய்தனர்.

அனைத்துப் பணிகளையும் தாங்களாகவே முன்னின்று மேற்கொண்ட அவர்கள் இறுதிஊர்வலத்தின் போதும் சோனியை தங்கள் தோள்களில் சுமக்கத் தவறவில்லை. அதுமட்டுல்ல இதிலும் உச்சபட்சமாக இறுதிஊர்வலத்தின்போது இந்து மரபுப்படி வழக்கமாகச் சொல்லப்படும் `ராம் நாம் சத்யா ஹை' என்ற கோஷத்தையும் வழியெங்கும் உச்சரித்தே சென்றுள்ளனர் அந்த இஸ்லாமிய மக்கள். இதைப் பார்த்த மற்றவர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.

சோனியின் சடலத்தை சுமந்துசெல்லும் இஸ்லாமியர்கள்
சோனியின் சடலத்தை சுமந்துசெல்லும் இஸ்லாமியர்கள்

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து சோனியை தோளில் சுமந்துசென்ற ஷகீல் என்பவர் பேசுகையில், ``இதுதான் உண்மை. இது வாழ்க்கையின் இறுதி. ஆனால் சிறிய சிறிய பிரச்னைகளுக்காக நாம் நமக்குள்ளாகவே போராடி பிரிந்துகிடக்கிறோம்" எனக் கூறியுள்ளார். பக்ரீத் தினத்தன்று அதற்கென ஏற்பாடுகளைக் கவனிக்காமல், இஸ்லாமியர்கள் செய்த உதவி அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.