தொழுகைக்காகத் திறக்கப்பட்ட தேவாலயம்!- கேரள போராட்டத்தில் நெகிழவைத்த மதச்சார்பின்மை

கேரளாவில் நடந்த குடியுரிமைச் சட்டத் திருத்தப் போராட்டத்தின்போது இஸ்லாமியர்கள், அங்குள்ள தேவாலயத்தில் தொழுகை நடத்தியுள்ளது வைரலாகியுள்ளது.
1955-ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், `11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்' என விவரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்ததால்தான் இந்தியா முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்படி, `பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பௌத்தர்கள் ஆகியோரிடம் உரிய ஆவணம் இல்லையென்றாலும் அவர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்தியக் குடியுரிமையை வழங்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மதத்தின் அடிப்படையில் உள்ளதாகவும் மதச்சார்பின்மை என்னும் இந்தியாவின் அடிப்படையையே சிதைத்துவிடும் என்றும் எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வருகின்றனர். 15 நாள்களுக்கும் மேலாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், மதச்சார்பற்ற இந்தியா என்பதை வலியுறுத்தும் பல்வேறு நிகழ்வுகளும் அரங்கேறின.

இதேபோன்று கேரளாவில் நடந்த ஒரு சம்பவமும் அதிக கவனம் ஈர்த்துள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ சில விநாடிகள் மட்டுமே ஓடுகிறது. அதில் ஒரு தேவாலயத்தின் வளாகத்தில் பல நூறு இஸ்லாமியர்கள் அமர்ந்து தொழுகை செய்துகொண்டிருக்கிறார்கள். குடியுரிமைச் சட்டத்திருத்தம் தொடர்பான போராட்டத்தின்போது இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் கொத்தமங்கலம் பகுதியில் மிகவும் பிரபலமானதாக உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்தில்தான் தொழுகை நடந்துள்ளது.
இது பற்றிப் பேசிய காங்கிரஸ் நிர்வாகி மேத்யூ குழல்நாதன், ``குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் உள்ள மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் மதச்சார்பற்ற முறையில் கொத்தமங்கலம் நோக்கி பேரணி நடத்தினோம். அதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களும் கலந்துகொண்டிருந்தனர். பேரணி முடியும்போது இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் நேரம் வந்துவிட்டது. பேரணி முடிந்து, மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்தினால் தாமதமாகிவிடும்.

அதனால் கொத்தமங்கலத்தில் உள்ள தேவாலயத்தில், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி கோரினோம். அவர்கள் அனுமதி வழங்கியது மட்டுமல்லாமல் தொழுகை செய்வதற்காகப் போர்வை, வெளிச்சம், மைக் போன்ற அனைத்தையும் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுத்தனர். மதச்சார்பின்மையை வலுப்படுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது. ஆனால், அதன் இறுதியில் நடந்த நிகழ்வு மதச்சார்பற்ற இந்தியா என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது” என்று தெரிவித்துள்ளார்.