Published:Updated:

`மக்கள் மீதான வழக்கு ரத்து; போலீஸார் மீது நடவடிக்கை! - அதிரடி காட்டும் ஜார்க்கண்ட் முதல்வர் #CAA

ஜார்க்கண்ட் முதல்வர்
ஜார்க்கண்ட் முதல்வர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடியவர்கள் பதிவு செய்யப்பட்ட வழக்கை அம்மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் தினம் தினம் போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த ஒரு மாதமாக இவர்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டுள்ளது.

குடியுரிமை போராட்டம்
குடியுரிமை போராட்டம்
Anupam Nath

அஸ்ஸாம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்து அதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மேலும் உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற பல மாநிலங்களில் ரயில்கள், பேருந்துகள் எனப் பொதுச்சொத்துகள் எரிக்கப்பட்டன. தொடர்ந்து டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்?’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் தன்பந்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட 3,000 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 7 பேரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது மற்றவர்களின் பெயர் விவரங்கள் இல்லாமலே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், ``மக்களைத் துன்புறுத்துவதற்கும் அவர்களை அமைதியாக்குவதற்கும் சட்டம் உருவாக்கப்படவில்லை, மக்களைப் பாதுகாப்பாக உணரவைப்பதே சட்டத்தின் வேலை. மக்களின் குரலாகவே என் அரசு செயல்படும்.

3,000 பேர் மீது போடப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கு தாமதமில்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் வழக்கு பதிவு செய்ய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. `இந்த அரசு உங்களுடையது‘ என்று ஜார்க்கண்டில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளிடமும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். சட்டம் ஒழுங்கை மதிப்பது எங்களின் கடமை” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை போராட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதன் பிறகே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு