Published:Updated:

`பாலிவுட் பிரபலங்களை மிரட்டி ரூ.1,000 கோடி பறிப்பு?!’-சமீர் வான்கடே மீது மகாராஷ்டிரா அமைச்சர் புகார்

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யனைக் கைது செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேவுக்கு எதிராக வந்த மர்மக் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாலிவுட் பிரபலங்களிடமிருந்து ஆயிரம் கோடி அளவுக்கு மிரட்டி பறிக்கப்படிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மும்பையில் இந்த மாத தொடக்கத்தில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டார். அவரின் ஜாமீன் மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகிறது. ஆர்யன் கானைக் கைதுசெய்ததில் முன்னின்று செயல்பட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஏற்கெனவே இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் கொசாவி என்பவர் தலைமறைவாகிவிட்டார். மற்றொரு சாட்சியான பிரபாகர் என்பவர் இரண்டு நாள்களுக்கு முன்பு அளித்திருந்த பேட்டியில், ``கொசாவியும், பாஜக பிரமுகர் பனுசாலியும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேயுடன் சேர்ந்துகொண்டு ஷாருக் கானிடமிருந்து ரூ.25 கோடி வரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றனர்’’ எனக் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டு குறித்து சமீர் மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. விசாரணையை எதிர்கொள்ள சமீர் டெல்லி புறப்பட்டு சென்றிருக்கிறார். தற்போது புதிய திருப்பமாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவரே சமீர் வான்கடேவுக்கு எதிராக மர்மக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்த மர்மக் கடிதத்தை மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``எனக்கு இந்தக் கடிதத்தைப் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் அனுப்பியிருக்கிறார்.

சமீர் வாங்கடே
சமீர் வாங்கடே

அதில் சமீர் வான்கடேவும், அவரின் அதிகாரிகளும் சேர்ந்து ஏராளமானோர் மீது போலி வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். மிகவும் சிறிய அளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்தால் அதன் அளவை அதிகாரிகளே அதிகரித்துவிடுகின்றனர். இந்த ஆண்டில் 26 வழக்குகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பதிவு செய்ததாகவும், இதில் முக்கியப் பிரமுகர்கள் எப்படி சிக்கவைக்கப்பட்டனர் என்றும் கடிதத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பலில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது போலியான வழக்காகும். சமீர் வான்கடேவுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகள்தான் இந்த போதைப்பொருள்களை வைத்துள்ளனர்.

இக்கடிதத்தை மேற்கொண்டு விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.ஜி-க்கு அனுப்பிவைப்பேன். வழக்கறிஞர் அயாஸ்கான் என்பவர் பாலிவுட் பிரபலங்களை மிரட்டி பணம் பறித்து அதை சமீரிடம் கொடுத்துள்ளார். சமீருக்கு அயாஸ் கான் மிகவும் வேண்டப்பட்டவர். எனவே சமீர் பாலிவுட் பிரபலங்களிடம் அவர்கள் தொடர்பான வழக்குகளை அயாஸ் கானைக்கொண்டு வாதாடும்படி கேட்டுக்கொண்டுள்ளார். பாலிவுட் பிரபலங்களை மும்பை மற்றும் மாலத்தீவில் மிரட்டி ரூ.1,000 கோடி அளவுக்கு பணம் பறிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு எதிராக நான் போராடவில்லை. அதில் மிரட்டிப் பணம் பறிக்கும் குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராகத்தான் போராடுகிறேன்” என்று தெரிவித்தார்.

ஆர்யன் கான்
ஆர்யன் கான்

சமீர் வான்கடேவின் பிறப்பு சான்றிதழ் ஒன்றையும் நவாப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சமீர் பெயர் சமீர் தாவூத் வான்கடே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி இங்கிருந்து தொடங்குவதாக நவாப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆவணங்களில் மோசடி செய்து யூபிஎஸ்சி தேர்வில் இட ஒதுக்கீடு மூலம் வேலை பெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். சமீர் 2006-ம் ஆண்டு டாக்டர் சபானா குரேஷி என்பவரைத் திருமணம் செய்ததாகவும், 2016-ம் அவரை விவாகரத்து செய்ததாகவும் நவாப் மாலிக் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

நவாப் மாலிக்கின் கருத்துக்கு பதிலளித்துள்ள சமீர், தனது தாயார் முஸ்லிம் என்றும் தந்தை இந்து என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு முதலில் சபானா குரேஷியைத் திருமணம் செய்துவிட்டு பின்னர் விவாகரத்து செய்ததையும் உறுதிப்படுத்தியுள்ளார். நவாப் மாலிக் மருமகனை சமீர் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைதுசெய்து ஆறு மாதங்களுக்கும் மேலாகச் சிறையில் அடைத்தார். அதிலிருந்து இருவருக்கும் மோதல் இருந்துவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு