Published:Updated:

நாக்பூர்: கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற தன் திருமணத்தை நிறுத்திய பெண் மருத்துவர்!

திருமணம்
திருமணம்

நோயாளிகளுக்கான படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், வென்டிலேட்டர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கும் இந்தச் சூழலில் நான் திருமணம் செய்துகொள்ள வேண்டியது அவசியமா எனச் சிந்தித்தேன்.

கொரோனா இரண்டாவது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், முன்களப் பணியாளர்களின் தேவையும் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. மருத்துவ மாணவர்களையும் சிகிச்சைக்கு பயன்படுத்த அரசு உத்தரவிட்டும் உயிர்களை காக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், பெண் மருத்துவர் ஒருவர் கொரோனா சேவையில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக நிச்சயிக்கப்பட்ட தன் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள இருதயவியல் மருத்துவனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார் அபூர்வா. இவருக்கு கடந்த ஏப்ரல் 26-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது இவர் தன் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

India Covid Outbreak
India Covid Outbreak
AP Photo / Channi Anand

திருமணத்தை நிறுத்தியது குறித்து அவர் கூறும்போது, ``கோவிட் தொற்றால் கடந்த செப்டம்பரில் என் தந்தை இறந்துவிட்டார். அவரது இழப்பு என்னையும் என் குடும்பத்தினரையும் வெகுவாகப் பாதித்தது. நாடு முழுவதும் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் எங்களைப் போன்று இழப்புகளை சந்தித்து வருகின்றன. என்னிடம் மருத்துவ ஆலோசனை கேட்கும் பலர் என்னிடம் விரக்தியும் கண்ணீருமாகப் பேசுகிறார்கள்.

கொரோனாவின் இரண்டாவது அலையால் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால், மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நான் ஒரு மருத்துவராக கோவிட் தொற்றுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்த நெருக்கடியான நிலையில் எனக்குத் திருணம் நிச்சயிக்கப்பட்டு தேதியும் குறிக்கப்பட்டது. நோயாளிகளுக்கான படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்துகள், வென்டிலேட்டர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கும் இந்தச் சூழலில் நான் திருமணம் செய்துகொள்ள வேண்டியது அவசியமா எனச் சிந்தித்தேன்.

COVID-19 (Representation Image)
COVID-19 (Representation Image)
AP Photo / Jae C. Hong

என் மனம் திருமணத்தை ஏற்கவில்லை. மேலும், என் திருமணத்தால் 20 - 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. என் முடிவை என் அம்மா, சகோதரி, மணமகன் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற போராடுவதிலும், அவர்களுக்கு சேவை செய்வதிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதில் நானும் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் இளம் பெண் மருத்துவர் அபூர்வா.

அபூர்வாவின் சேவை மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு