Published:Updated:

`தாயின் மரணம்... 7 வயதில் பாலியல் வன்கொடுமை'- வீழ்ந்த போதெல்லாம் விருட்சமாக எழுந்த நட்டாஷா!

தன் மீதே தனக்கு வெறுப்பு ஏற்பட்ட பின்னர், அவரின் கண்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை.

நட்டாஷா
நட்டாஷா

செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 7 பெண்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பன்முகத் தன்மைகொண்ட பெண்களைக் கௌரவிக்கும் விதமாக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியர்களான நட்டாஷா நோயல், ஆரண்யா ஜோஹர், சுஷ்மிதா மொஹந்தி, வந்தனா சிவா, பிரகதி சிங், சுபலட்சுமி நந்தி, பர்வீனா அஹாங்கெர் ஆகியோரை பிபிசி கெளரவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த நட்டாஷா நோயல் வலிகளைக் கடந்து வாழ்க்கையில் சாதித்துக்காட்டிய பெண்மணி. யோகா ஆசிரியர், மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், நடனக் கலைஞர் என பன்முகத் தன்மைகொண்டவர் நட்டாஷா. இவரின் குழந்தைப் பருவம் அவ்வளவு அழகானதாக இல்லை. விளையாட்டுப் பொம்மைகளுடன் அவரது வாழ்க்கை நகரவில்லை. அவரே விளையாட்டுப் பொம்மையாக்கப்பட்டார்.

natasha noel
natasha noel

மும்பையைச் சேர்ந்த நட்டாஷா நோயல், வலிகளைக் கடந்து வாழ்க்கையில் சாதித்துக்காட்டிய பெண்மணி. யோகா ஆசிரியர், மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், நடனக் கலைஞர் எனப் பன்முகத் தன்மைகொண்டவர் நட்டாஷா. இவரின் குழந்தைப் பருவம் அவ்வளவு அழகானதாக இல்லை. விளையாட்டுப் பொம்மைகளுடன் அவரது வாழ்க்கை நகரவில்லை. அவரே விளையாட்டுப் பொம்மையாக்கப்பட்டார். 3 வயது குழந்தையான நட்டாஷாவின் கண் முன்னே அவரது தாய் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

அந்தச் சம்பவத்தை நட்டாஷா நினைவுகூரும்போது, “எனது அம்மா தற்கொலை செய்துகொண்டார். தீயில் கருகி உயிரிழந்ததை என் கண்களால் பார்த்தேன். அந்தச் சம்பவம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்தக் காட்சிகள் எப்போதும் என கண்களைவிட்டு மறையாது. அந்த நினைவுகளை அழிக்க நினைத்தால், கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். என் தாயின் மரணத்துக்கு நான் காரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். என்னால் அவரைக் காப்பாற்ற முடியாது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், அதற்கான முயற்சியை நான் எடுக்கவில்லை. என் தாயின் மரணத்துக்கு என்னை நானே குற்றம் சுமத்திக்கொண்டேன்” என ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

natasha noel
natasha noel

தாயின் மரணத்துக்குப் பிறகான நாள்கள் மிகவும் கொடுமையானதாக இருந்துள்ளது. 7 வயதில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். 15 வயது வரை உறவினர்களால் பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்பங்களை அனுபவித்தார். அந்த நாள்களில் எல்லாம் உலகமே தனக்கு எதிராக இருப்பதுபோன்ற உணர்வுகள் அவருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நாள்களில், ஒரு நடைப்பிணம்போல் தனது வாழ்க்கையைக் கழித்துள்ளார். தன் மீதே தனக்கு வெறுப்புணர்வு ஏற்பட்ட பின்னர், அவரது கண்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை.

யாரை நம்புவது என்பதே அவருக்குத் தெரியவில்லை. வாழ்க்கையின் நோக்கம் என்ன என்ற கேள்விகளுடனே அவருடைய ஒவ்வொரு விடியலையும் எதிர்கொண்டுள்ளார். நடனம் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், 17 வயதில் அதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட விபத்தால் சில வாரங்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், அவர் நடனமாடச் சென்றார். ஏனென்றால், ஓய்வு என்பதை வெறுத்தார். அவர் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது என எண்ணினார். ஆனால், துரதிர்ஷடவசமாக அவரது கால் தசைநார்களில் பிரச்னை ஏற்பட்டது. மேலும் அவருக்கு மூட்டு பிரச்னையும் இருந்தது.

natasha noel
natasha noel

வாழ்க்கை எவ்வளவு காயங்களைக் கொடுத்தாலும், நட்டாஷா ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை. தன்னை மாய்த்துக்கொள்வதாலோ காயப்படுத்துவதாலோ எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை என்பதில் தெளிவாக இருந்தார். இந்தக் காயங்களுக்கு அவர் தேடிய மருந்து, யோகா. அந்த யோகா, நட்டாஷாவின் வாழ்க்கையை மாற்றியது. இப்போது, நடனக் கலைஞர், மோட்டிவேஷனல் ஸ்பீக்கர், யோகா ஆசிரியர் எனப் பன்முகத் தன்மையுடன் வலம்வருகிறார். நட்டாஷாவின் வாழ்க்கைப் பயணம் மிகவும் கடினமானது. ஆனால் ,அவர் விழுந்த ஒவ்வொரு முறையும் வலுவாக எழுந்து நின்றார்.