Published:Updated:

`தாராவியிலிருந்து நெல்லைக்கு..!' - கொரோனா அச்சத்தால் மும்பையைவிட்டு வெளியேறும் தமிழர்கள்?

பைக்கில் சொந்த ஊருக்குக் கிளம்பிய தொழிலாளர்கள்
பைக்கில் சொந்த ஊருக்குக் கிளம்பிய தொழிலாளர்கள்

மும்பை தாராவிப் பகுதியில் மிகச் சிறிய இடத்துக்குள் வசிக்க வேண்டியிருப்பதால் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க இயலவில்லை.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக மும்பையின் தாராவி பகுதி உள்ளது. சுமார் இரண்டு சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பகுதிக்குள் ஏழு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மும்பையின் தாராவி பகுதியில் வேகமாகப் பரவி வருகிறது. 

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தாராவியில் பெரும்பான்மையினராக தமிழர்களே உள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அங்குள்ள தமிழர்கள் தவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தாராவிப் பகுதியில் வசிக்கும் ரவியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,``தமிழகத்திலிருந்து பல வருடங்களுக்கு முன்பு இங்கே குடியேறி வசித்து வருகிறோம். இங்கே 100 சதுர அடியில் உள்ள வீட்டில் 10 பேர் குடியிருப்போம். பகலில் ஐந்து பேர் வேலைக்குச் செல்வோம். இரவில் ஐந்து பேர் வேலைக்குச் செல்வோம். 

வேலை இல்லாததால் எல்லோரும் சிறிய வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால் நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.
ரவி, தாராவி

அதனால் சிறிய வீட்டில் அதிகமானோர் இருந்தாலும் ஒன்றும் தெரியாது. இப்போது வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதனால் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதால் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதனால்தான் சிலர் இங்கிருந்து கள்ளத்தனமாக சொந்த ஊருக்குக் கிளம்புகிறார்கள்” என்றார்.

தாராவியிலிருந்து சிலர் பைக்கிலேயே நெல்லை, தூத்துக்குடியில் உள்ள அவர்களின் சொந்த ஊர்களுக்கு வந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் மூலமாக வந்த சிலர் மட்டுமே போலீஸாரிடம் பிடிபட்டுள்ளனர். அதனால் அந்தந்த ஊர்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் வெளியிடங்களிலிருந்து வருவோர் பற்றி அறிந்து கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

நெல்லையில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான உதவி மையம்
நெல்லையில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான உதவி மையம்

குமரி மாவட்டத்தில் வேலை செய்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 18 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சில தினங்களுக்கு முன்பு பைக் மூலம் சொந்த ஊருக்குச் செல்ல முயன்றபோது நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் செக்போஸ்ட்டில் பிடிபட்டு தனிமையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மும்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல்லை மாவட்டத்துக்குள் வருவோரைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் வகையில், மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் அருகே சோதனைச் சாவடி பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு வருவோருக்குக் கொரோனா சோதனை செய்யும் மையமும் தனிமைப்படுத்தும் முகாமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

வெளிமாநிலத் தொழிலாளர்கள்
வெளிமாநிலத் தொழிலாளர்கள்

சென்னையில் இருந்து சரக்கு வாகனத்தில் ஏறி கூடங்குளம் அருகே உள்ள ஆவுடையாள்புரம் கிராமத்துக்குள் 24 பேர் வந்துவிட்டனர். அவர்களைப் பிடித்து விசாரித்த போலீஸார், வள்ளியூர் அருகே தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இத்தகைய சம்பவங்கள் தொடர்வதைத் தடுக்கும் வகையில் போலீஸார் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என நெல்லை மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு