ஜம்மு காஷ்மீரில் சமீபகாலமாக தீவிரவாதிகள் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர். இதனால் பாதுகாப்புப் படையினர் எந்நேரமும் ட்ரோன்களையும் கண்காணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே தீவிரவாதிகளைத் தொடர்ந்து நக்சலைட்களும் ட்ரோன்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மகாராஷ்டிராவிலும், சத்தீஸ்கர் எல்லைப் பகுதியிலும் அதிகப்படியான நக்சலைட்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் இப்போது ட்ரோன்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவின் கட்சிரோலி, கோண்டியா மாவட்டங்களில் அதிகப்படியான நக்சலைட்களின் நடமாட்டம் இருக்கிறது.

அவர்கள் அடிக்கடி போலீஸார் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இது குறித்து மகாராஷ்டிரா டி.ஜி.பி சந்தீப் பாட்டீல் பேசுகையில், ``சத்தீஸ்கர் எல்லையில் இருக்கும் எங்களது முகாம்களைக் கண்காணிக்க நக்சலைட்கள் ட்ரோன்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அவர்கள் சிறிய வகை ட்ரோன்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் எட்டு ட்ரோன்கள் வந்ததைக் காண முடிந்தது. இந்த ட்ரோன்கள் திருமணத்துக்குப் புகைப்படம், வீடியோ எடுக்கப் பயன்படக்கூடிய சிறிய வகையைச் சேர்ந்தவை. அவற்றைக் கட்டுப்படுத்த ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்.
மலைகளில் இருந்துகொண்டு பாதுகாப்புப் படையினர் எங்கு இருக்கின்றனர் என்பதைக் கண்காணிக்க இந்தச் சிறிய வகை ட்ரோன்களை பயன்படுத்தும் நக்சலைட்கள், அவற்றை ஹைதராபாத்தில் வாங்கியிருக்கின்றனர். நக்சலைட்களின் இந்த ட்ரோன் முயற்சியை சத்தீஸ்கர் போலீஸாரின் துணையோடு கண்காணித்துவருகிறோம். கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியிருக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார். தீவிரவாதிகளைத் தொடர்ந்து நக்சலைட்கள் ட்ரோன்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருப்பது பாதுகாப்புப் படையினருக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. ட்ரோன்கள் மூலம் எளிதில் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதால் அவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று மத்திய அரசு ஆலோசித்துவருகிறது.