Published:Updated:

`வலிகளுடன் கனவை நிறைவேற்றியுள்ளேன்!' - கிளிமஞ்சாரோ மலையை ஒற்றைக்கால் கொண்டு கடந்த நீரஜ்

கிளிமஞ்சாரோ மலை சிகரத்தில் நீரஜ் ஜார்ஜ்
கிளிமஞ்சாரோ மலை சிகரத்தில் நீரஜ் ஜார்ஜ்

`ஐந்து ஆண்டுகளாக என் மனதில் கிடந்த கனவை, வலிகளுடன் கடந்து நிறைவேற்றியிருக்கிறேன்!' -கிளிமஞ்சாரோ மலை ஏறிய நீரஜ் ஜார்ஜ்.

கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ் ஜார்ஜ். எட்டு வயதில் காலில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக இடதுகால் அகற்றப்பட்டது. ஒருகாலை இழந்தும் மனம் தளராத நீரஜ் ஜார்ஜ் பேட்மின்டன் விளையாட்டில் பயிற்சிபெற்றார்.

மலை ஏறும் நீரஜ் ஜார்ஜ்
மலை ஏறும் நீரஜ் ஜார்ஜ்

உள்ளூரில் பல போட்டிகளில் வென்றவர், 2015-ல் ஜெர்மனியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பாரா பேட்மின்டன் போட்டியில் கலந்துகொண்டார். ஸ்கூபா டைவிங், மலையேற்றம் எனப் பலத்துறைகளில் ஆர்வம் கொண்டவர் நீரஜ் ஜார்ஜ்.

இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தில் மிகவும் உயரமான கிளிமஞ்சாரோ மலையை தனது ஒற்றைக்காலைக் கொண்டு கடந்து சாதனைபுரிந்திருக்கிறார் நீரஜ் ஜார்ஜ். கடந்த அக்டோபர் 10-ம் தேதி ஊன்றுகோல் உதவியுடன், உறவினர்களும் உடன் செல்ல 19,345 அடி உயர மலையை எட்டிப்பிடித்திருக்கிறார். மலை சிகரத்தை அடைந்தது குறித்து கடந்த 17-ம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள நீரஜ் ஜார்ஜ், "இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். ஐந்து ஆண்டுகளாக என் மனதில் கிடந்த கனவை, வலிகளுடன் கடந்து நிறைவேற்றியிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேட்மின்டன் விளையாடும் நீரஜ் ஜார்ஜ்
பேட்மின்டன் விளையாடும் நீரஜ் ஜார்ஜ்

பயோடெக்னாலஜியில் பட்டம் பெற்ற நீரஜ் ஜார்ஜ் இப்போது கொச்சி அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். கிளிமஞ்சாரோ மலை சிகரத்தை எட்டிப்பிடித்த நீரஜ் ஜார்ஜ் நாளை காலை சொந்த ஊருக்கு வருகிறார். அவரை வரவேற்க உறவினரும், ஊராரும் காத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு