Published:Updated:

இந்தியா உடனான எல்லைப் பிரச்னை; சர்ச்சை வரைபடம்! - ஒப்புதல் அளித்த நேபாள மேல்சபை

பிரச்னைக்குரிய எல்லைப் பகுதிகளை நேபாள அரசு தனது எல்லையுடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்னைகள் தீவிரமாகியுள்ளன. கடந்த சில வாரங்களாக அதிகளவில் நிலவிய பதற்றங்கள் சில நாள்களுக்கு முன்பு மோதலாக மாறின. இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடிந்து ராணுவப் படைகள் எல்லைப் பகுதியிலிருந்து திரும்பிச் செல்லும்போது இருநாட்டு ராணுவ வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், இருதரப்பிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. இந்தப் பிரச்னைகளை முடித்துக்கொண்டு அமைதி வழிக்குத் திரும்ப இருநாட்டு அதிகாரிகளும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். எனினும், பதற்றங்கள் அதிகமாகவே உள்ளன. இந்திய ராணுவ வீரர்கள் இறந்ததால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சீனாவுக்கு எதிராகப் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தற்போது நேபாளம் உடனான எல்லைப் பிரச்னையும் பதற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

இந்தியா
இந்தியா

இந்தியாவும் நேபாளமும் சுமார் 1,800 கி.மீ-க்கும் அதிகமான எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. இரு நாடுகளுக்கான எல்லையில் பீகார், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதில், பெரும்பான்மையான எல்லைகளுடன் இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்னை இல்லை. ஆனால், உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள லிபுலேக், கலாபனி மற்றும் லிம்பியதுரா பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்னையாக உள்ளது. இதில், லிபுலேக் சீனாவுடனான எல்லையையும் பகிர்ந்துகொள்கிறது. 1818-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட சுகாலி என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் லிபுலேக் பகுதி தங்களுடையது என நேபாளம் உரிமை கோரி வருகிறது.

Vikatan

உத்தரகாண்டில் உள்ள லிபுலேக் பாஸை கைலாஷ் மானசரோவர் வழித்தடத்துடன் இணைக்கும் சாலையை, இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மே மாதம் 8-ம் தேதி திறந்துவைத்தார். நேபாள அரசு இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. முன்னதாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளைப் பிரித்த பின்னர் வெளியிடப்பட்ட புதிய வரைபடத்தில் எல்லைப் பிரச்னை இருந்து வரும் பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகளை இணைத்ததும் இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரித்தது.

இதுதொடர்பாக கடுமையான எச்சரிக்கைகளையும் நேபாள அரசு விடுத்தது. இதையடுத்து, இந்தப் பிரச்னைக்குரிய எல்லைப் பகுதிகளை நேபாள அரசு தனது எல்லையுடன் இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

`பாஸ்தாவில் கலந்த மயக்க மருந்து!'- தொழிலதிபருக்கு அதிர்ச்சி கொடுத்த நேபாள சமையல் மாஸ்டர்

எல்லைப் பிரச்னை மட்டுமல்லாமல் கொரோனா தொடர்பான பிரச்னைகளிலும் நேபாள பிரதமர் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால், கடந்த சில வாரங்களாக இருநாடுகளுக்கும் இடையே சில பதற்றங்கள் நிலவி வந்தன. இதனிடையே, நேபாள பாராளுமன்றத்தின் கீழ்சபையில் இந்திய எல்லைப் பகுதிகளையும் சேர்த்து வெளியிடப்பட்ட புதிய வரைபடத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசியல் சாசன திருத்த மசோதா கடந்த சனிக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

நேபாள அரசின் செயற்கை எல்லை விரிவாக்கம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியாவும் கூறியது. இதனையடுத்து, வரைபடம் புதுப்பிப்பது தொடர்பான மசோதாவை மேல் சபையிலும் நேபாள அரசு இன்று ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.

நேபாளம்
நேபாளம்

இந்த மசோதாவுக்கு ஆதரவாக அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். ஏற்கெனவே, சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைகள் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் நேபாளத்தின் அதிரடி நடவடிக்கைகள் நேபாளம் மற்றும் இந்தியாவுக்கு இடையே மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் இதுவரை அமைதியான முறையில் கண்டனம் மட்டும் தெரிவித்து வந்தன. ஆனால், தற்போது வரைபடத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதற்கு அதிகாரபூர்வ அங்கீகாரமும் கொடுப்பதால் இந்த விஷயத்திலும் இந்தியா அதிக கவனத்தைச் செலுத்திவருவதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்தியா மற்றும் நேபாள எல்லைகளிலும் பதற்றம் நிலவி வருகிறது.

`சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் ஆபத்தானது!’ - நேபாளப் பிரதமரின் சர்ச்சைப் பேச்சு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு