Published:Updated:

`கொரோனா சிறப்புக் கட்டணம்’ -டெல்லியில் அனைத்து மதுபான வகைகளுக்கும் 70% கூடுதல் வரி

அரசாணை
அரசாணை

இந்த வரி உயர்வை டெல்லி மாநில அரசு `சிறப்பு கொரோனா கட்டணம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது லாக் டெளன் 3.0 அமலில் இருக்கிறது. அதன்படி, பச்சை மண்டலத்தில் கூடுதல் தளர்வுகளுடனும் ஆரஞ்ச் மண்டலத்தில் சில தளர்வுகளுடனும் சிவப்பு மண்டலத்தில் தளர்வுகள் இன்றியும் ஊரடங்கு தொடர்கிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் சில கட்டுப்பாடுகளுடன் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

மதுபான கடைக்கு முன் நிற்கும் கூட்டம்
மதுபான கடைக்கு முன் நிற்கும் கூட்டம்
Representational image

டெல்லியிலும் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் 40 நாள்களுக்குப் பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், மது வாங்க வந்த யாரும் கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சில பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் வரிசையில் நின்றனர். தனிமனித இடவெளி உள்ளிட்ட எந்த விஷயமும் அங்கு பின்பற்றப்படவில்லை. இதனால் 4 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது தொடர்பாக பேசுகையில், ``மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் அந்தப் பகுதிகள் தளர்வுகள் திரும்பப் பெறப்படும்” என எச்சரித்தார். மேலும், வெளியே வரும் மக்களுக்கு மாஸ்க் கட்டாயம் எனவும் அவர் அறிவித்தார். இந்த நிலையில், நேற்று இரவு டெல்லி மாநில அரசு மதுபான பொருள்களுக்கு 70% கூடுதல் வரி விதித்துள்ளது.

டெல்லி அரசின் அரசாணை
டெல்லி அரசின் அரசாணை

இதன் மூலம் உரிமம் பெற்ற சில்லறை வர்த்தகர்கள் மூலம் விற்கப்படும் அனைத்து வகையான மதுபானங்களுக்கும் 70% கூடுதல் கலால் வரி வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்று முதல் டெல்லியில் அனைத்து வகையான மதுபானங்களின் விலையும் 70% அதிகரிக்கும். இந்த வரி உயர்வை மாநில அரசு `சிறப்பு கொரோனா கட்டணம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு