Published:Updated:

`பரிசோதனைகள் முதல் மருந்துகள் வரை!’ - ஆரோக்கிய சேது செயலியில் புதிய வசதி அறிமுகம்

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி

``ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களின் நிலை கருதி கோவிட் - 19 நோய்க்கான ரத்த பரிசோதனைகளும் இந்தச் செயலியின் மூலம் தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது.”

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மக்கள் பெறுவதற்கு வசதியாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் அண்மையில் `ஆரோக்கிய சேது' செயலியை அறிமுகம் செய்துது. இதை ஆண்ட்ராய்டு, ஐ போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் செயலி செயல்படுகிறது. மக்களிடையே இந்தச் செயலி அதிகமான வரவேற்பைப் பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் இதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஜி.பி.எஸ் மற்றும் ப்ளூடூத் சேவையைக் கொண்டு செயல்படுவதால், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இதே செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் தகவல்களைக் கொடுத்திருந்தால், அதுவும் ஒரே இடத்தில் பதிவாகியிருக்கும். இதன்மூலம் மற்ற நபர்கள் அருகில் செல்லும்போது எச்சரிக்கை செய்கிறது.

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி

மத்திய அரசால் வெளியிடப்பட்ட சில நாள்களுக்குள் பல கோடி பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட 'ஆரோக்கிய சேது' செயலி விமர்சனங்களுக்கும் தப்பவில்லை. ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி ராணுவ வீரர்களின் மொபைல் போன்களில் பாகிஸ்தான் உளவுத்துறை 'ஆரோக்கிய சேது' செயலியின் பயனர் பயன்பாட்டு கட்டமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட 'போலி ஆரோக்கிய சேது' செயலி இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் போலி செயலியின் மூலம் இந்திய ராணுவத்தினரை உளவு பார்க்கும் வேலைகளில் பாகிஸ்தான் உளவுத்துறை ஈடுபட்டது கண்டுபிக்கப்பட்டு பின் இந்திய ராணுவம் வீரர்களை எச்சரித்தது. அதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன் மத்திய அரசின் 'ஆரோக்கிய சேது' செயலி குறித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அதிருப்தி கருத்து இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

`ஆரோக்கிய சேது; சந்தேகம் எழுப்பும் ராகுல்...விளக்கமளித்த மத்திய அமைச்சர்!’ - ட்விட்டர் போர்

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஆரோக்கிய சேது அதிநவீன கண்காணிப்பு செயலிதான். இருப்பினும் இதை அவுட்சோர்சிங் மூலம் தனியார் அமைப்பு வடிவமைத்துள்ளதால் தனிமனித பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுகின்றன. மேலும், மக்களை இந்தச் செயலி மூலம் அவர்கள் அனுமதியின்றி கண்காணிக்கக் கூடாது” எனத் தெரிவித்தார். இவரின் கருத்துக்கு பதிலளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆரோக்கிய சேது செயலி வலுவான பாதுகாப்பு கட்டமைப்பைக் கொண்டது என்றும், மக்களைப் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு துணையாக இந்தச் செயலி திகழ்வதாகவும் தெரிவித்தார். வாழ்நாள் முழுவதும் பிறரை கண்காணிப்பில் ஈடுபட்டவர்களுக்குத் தொழில்நுட்பத்தை நல்ல விஷயத்துக்காக எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரியாது என ராகுலை கடுமையாகச் சாடினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி 'ஆரோக்கிய சேது ' செயலி தனியார் அமைப்புகளுடன் இணைந்து அரசால் வடிவமைக்கப்பட்ட செயலிதான். மக்கள் தங்களின் தகவல்கள் அனைத்தையும் சமர்பிப்பதன் மூலம்தான் இந்தச் செயலி நமக்கு உதவுகிறது. அப்படி இருக்க இந்தச் செயலியில் தங்களின் தகவல்களை அளிக்கும் பயனர்களின் பாதுகாப்பை மத்திய அரசுதான் உறுதி செய்ய வேண்டும். இந்த நிலையில் மத்திய அரசுடன் இணைந்து டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் 'ஆரோக்கிய சேது ' செயலியில் பல கூடுதல் சிறப்பம்சங்களைப் புகுத்தி இருக்கின்றன. ஆரோக்கிய சேது செயலியில் புதிதாக 'MITR டெலி மெடிசின் போர்டல்' ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது, இந்தப் போர்டலின் மூலம் இனி மக்கள் வீட்டில் இருந்தபடியே மருத்துவ உதவிகளை இந்தச் செயலியின் மூலமாகப் பெறலாம்.

ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்களின் நிலை கருதி கோவிட் - 19 நோய்க்கான ரத்த பரிசோதனைகளும் இந்தச் செயலியின் மூலம் தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் ரத்த பரிசோதனை குறித்து முறையாகப் பதிவு செய்வதன் பேரில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வக மருத்துவ ஊழியர்கள் வீடுகளுக்கே வந்து பரிசோதனைக்கு ரத்த மாதிரிகளைச் சேகரித்துச் சென்று முறையாகப் பரிசோதனை முடிவுகளையும் பயனர்களுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பரிசோதனைகளைப் பயனர் கோரிக்கையின் பேரில் மேற்கொள்ள மத்திய அரசு தைரோகேர், மெட்ரோபொலிஸ், SRL டயக்னோஸ்டிக்ஸ் போன்ற தனியார் ஆய்வகங்களுக்கு முதற்கட்டமாக அனுமதி அளித்துள்ளது.

கோவிட் - 19 நோய் குறித்த சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு இந்தியாவின் முதன்மை டெலி மெடிசின் அமைப்பான ஸ்வஸ்த் அமைப்புடன் மத்திய அரசு கைகோர்த்துள்ளது. பயனர்கள் தமிழ், ஆங்கிலம், ஒடியா, மலையாளம், இந்தி, தெலுங்கு, பஞ்சாபி மற்றும் கன்னட மொழிகளில் இந்த மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக பிரத்யேக மருத்துவக் குழு பணியமர்த்தப் பட்டுள்ளது. அதே போல் இந்தப் பணியில் டாடா குழுமத்தின் பிரிட்ஜிட்டல் ஹெல்த் கேர் அமைப்பும், மஹிந்திரா குழுமத்தின் கனெக்ட் சென்ஸ் ஹெல்த் கேர் அமைப்பும் தங்கள் மருத்துவர்களுடன் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு மருத்துவர்கள்
அரசு மருத்துவர்கள்

முன்னதாக 'ஆரோக்கிய சேது' செயலியின் பயனர் தகவல் பாதுகாப்பு குறித்து எதிர்வாத கருத்துகள் எழுந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு இம்முறை 'ஆரோக்கிய சேது' செயலியின் MITR போர்டலில் பயனர் அளிக்கும் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. செயலியில் பயனர் அளிக்கும் தகவல்கள் மருத்துவர்கள் அவர்களை அழைப்பதற்கும், மருத்துவ உதவிகள் மேற்கொள்வதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் போர்டலில் பயனர் அளிக்கும் தகவல்கள் வேறு எந்த வகையிலும் பயன்படுத்த படாதென்றும் உறுதி அளித்துள்ளது.

இந்தியாவில் தீவிரம் அடைந்திருக்கும் கொரோனாவால் மக்கள் பயந்து வீட்டுக்குள் முடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவ உதவிகள் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. எனவே, மக்கள் இந்த 'ஆரோக்கிய சேது' செயலியின் மூலம் வீட்டில் இருந்தபடியே ரத்த பரிசோதனைகள் செய்யவும் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்குவும் மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகளைப் பெறுவதற்கும் பயன்படும் இந்தச் செயலியைத் தங்கள் மொபைல்களில் பதிவிறக்கம் செய்ய மக்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

பாகிஸ்தானின் போலி `ஆரோக்கிய சேது’ செயலி?! - இந்திய ராணுவத்தினரை அலர்ட் செய்த அதிகாரிகள்
அடுத்த கட்டுரைக்கு