Published:Updated:

`ரெட்ஜோனில் சென்னை உட்பட 129 மாவட்டங்கள்!’- மே 3-க்குப் பிறகு மத்திய அரசின் ஆக்‌ஷன் பிளான் #Lockdown

ஊரடங்கு
ஊரடங்கு ( AP | Mahesh Kumar A )

நாடு முழுவதும் ஆரஞ்சு மற்றும் க்ரீன் ஜோன்களில் மே 3ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தளர்வுகள் இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக தேசிய அளவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இந்தநிலையில், மே 3ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா அல்லது ஒரு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

ஊரடங்கு
ஊரடங்கு
AP | Channi Anand

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது தெளிவுபடுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத் தகவல்களின்படி, நாடு முழுவதும் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற மண்டலங்களில் மே 3ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்குவதற்காக குறிப்பிடத்தக்க அளவுக்குத் தளர்வுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக மே 4ம் தேதியிலிருந்து புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் வரும் நாள்களில் வெளியிடப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

குறிப்பாகக் கடந்த 28 நாள்களில் புதிதாக கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படாத க்ரீன் ஜோனில் இருக்கும் மாவட்டங்கள் மற்றும் 14 நாள்களில் தொற்று கண்டறியப்படாத ஆரஞ்சு ஜோனில் இருக்கும் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தளர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், ரெட் ஜோனில் ஏறக்குறைய 129 மாவட்டங்கள் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தார். இந்த மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அதிகம் இருக்காது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை
சென்னை

அதேநேரம், ரெட் ஜோனில் டெல்லி, மும்பை, சென்னை, அகமதாபாத் உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பொருளாதார மண்டலங்கள் வருவதால், அது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் பெரும்பாலான ஹாட் ஸ்பாட்டுகள் இருப்பதையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் வைரஸ் தொற்று தொடர்பான சோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நல்ல பலன் கிடைத்திருக்கிறது என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் சார்பில்,``தற்போது வரை அமலில் இருக்கும் லாக்டௌனால் குறிப்பிடத்தக்க அளவு பலன் கிடைத்திருக்கிறது. நாட்டின் தற்போதைய சூழல் குறித்து ஆய்வு செய்திருக்கிறோம்.

ஊரடங்கு
ஊரடங்கு
AP | Mahesh Kumar A

இதனால், லாக்டௌன் கட்டுப்பாடுகள் மே 3ம் தேதி வரை உறுதியாகக் கடைப்பிடிக்கப்படும். புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் மே 4ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அதில், நாட்டின் பல மாவட்டங்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவு தளர்வுகள் அறிவிக்கப்படும். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’’ என்று அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று குறைவான பகுதிகளில் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகள் தவிர மற்ற கடைகளைத் திறக்க அனுமதிக்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு