Published:Updated:

இதயநோய் நிபுணரை என்.ஐ.ஏ வளையத்தில் சிக்கவைத்த `INR'!

ஆ.பழனியப்பன்

காஷ்மீரில் பிரிவினைவாதிகளுடனான தொடர்பு குறித்து டெல்லியைச் சேர்ந்த பிரபல இதயநோய் நிபுணரான டாக்டர் உபேந்திரா கவுலை தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரித்தனர்.

உபேந்திரா கவுல்
உபேந்திரா கவுல்

டெல்லியைச் சேர்ந்த பிரபல இதயநோய் நிபுணரான டாக்டர் உபேந்திரா கவுல், பத்ரா மருத்துவமனையின் தலைவராகவும் உள்ளார். அவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

என்னிடம் மிகவும் மரியாதையுடன் விசாரணை நடத்தினர். நானும் மிகவும் மரியாதையுடன் எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் அளித்தேன்
உபேந்திரா கவுல்

டாக்டர் உபேந்திரா கவுல், ஜே.கே.எல்.எஃப் எனப்படும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற பிரிவினைவாத அமைப்பின் தலைவரான யாசின் மாலிக்கின் மருத்துவர் ஆவார். டாக்டர் உபேந்திரா மற்றும் யாசின் மாலிக் ஆகியோருக்கு இடையிலான எஸ்.எம்.எஸ் பரிமாற்றம் தொடர்பாகவே என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது, ஒரு எஸ்.எம்.எஸ் தகவலில் “Blood Report Value INR 2.78” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. "- INR என்பதற்கு Internationalised Normalised Ratio என்று அர்த்தமாம். ஆனால், அதற்கு ‘இந்திய ரூபாய்’ என இருக்கலாம் என்றும், 2.78 கோடி ரூபாய் ஹவாலா பணம் தீவிரவாத அமைப்புகளுக்குச் சென்றிருக்கலாம் என்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சந்தேகித்துள்னர். அதனாலேயே இந்த விசாரணை என்று சொல்லப்படுகிறது.

`வருத்தம் வேண்டாம்; அரசியல் வளர்ச்சிக்கு உதவும்'- காஷ்மீர் நிலைகுறித்து பேசிய ஆளுநர் மாலிக்!

விசாரணைக்குப் பின் டாக்டர் உபேந்திரா கவுல், ``காஷ்மீரில் உள்ள சில தீவிரவாத அமைப்புகளுக்கு நடந்த பணப் பரிவர்த்தனை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். என்னிடம் மிகவும் மரியாதையுடன் விசாரணை நடத்தினர். நானும் மிகவும் மரியாதையுடன் எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் அளித்தேன்” என்று கூறியிருக்கிறார்.