Published:Updated:

இலவச சிலிண்டர்; விவசாயிகளுக்கு ரூ.2,000 - வைரஸ் பாதிப்புக்கு ரூ.1,70,000 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1,70,000 கோடி ஒதுக்கியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கொரோனா வைரஸால் மொத்த இந்தியாவும் வீட்டில் ஒடுங்கி தவித்து வருகிறது. இருந்தும் தற்போது வரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 19-ம் தேதி மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, பொருளாதாரத்தின் மீது கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதைச் சரி செய்வதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர், ‘எந்த வங்கி, எந்த ஏ.டி.எம் மையத்திலும் கட்டணமின்றி பணம் எடுத்துக்கொள்ளலாம், வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது’ என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் இன்று பிற்பகல் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருளாதார சலுகைகளை அறிவித்தார்.

`21 நாள் ஊரடங்கு ஏன்?; கொரோனாவை எதிர்க்கும் ஆயுதம்!’ -  பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

“வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற இரவு பகலாக உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி. தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 36 மணி நேரம் ஆகியுள்ள நிலையில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் வைரஸ் பாதிப்பு நடவடிக்கைகளுக்காக 1,70,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் யாரும் கையில் பணம் இல்லாமல், உணவு இல்லாமல் பசியில் வாடக்கூடாது என்பதற்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளோம்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ய யோஜனா திட்டத்தின்கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள 80 கோடி மக்களுக்கு ஏற்கெனவே 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு அடுத்து வரும் 3 மாதங்களுக்கு மேலும் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படும். இது இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1 கிலோ பருப்பு வழங்கப்படும். இதே திட்டத்தின்கீழ் வரும் சுய உதவிக்குழுக்களுக்குத் தீன் தயாள் கடன் திட்டத்தின்கீழ் அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அது இரு மடங்காக உயர்த்தப்பட்டு 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்.

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் அளவுக்குக் காப்பீடு வழங்கப்படும். ஜந்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு ரூ.500 வழங்கப்படும் இதனால் நாடு முழுவதும் 20 கோடி பெண்கள் பயனடைவார்கள். கிசான் யோஜ்னா திட்டத்தின்கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு விவசாயிகளுக்கு ரூ.2000 என அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

 விவசாயிகள்
விவசாயிகள்

பிதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். இதனால் 8.3 கோடி குடும்பங்கள் பயன்பெறும். 60 வயதைக் கடந்தவர்கள் விதவைகள், ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும்.

ஒரு முறை வழங்கப்படும் இந்த உதவி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (PF) ஊழியர்கள் 75% பணம் அல்லது தங்களின் 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொள்ளலாம். இதனால் 4.8 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு