Published:Updated:

`129 ஆண்டுகளுக்குப் பிறகு...’ - மகாராஷ்டிராவில் கரையைக் கடக்கிறது நிசார்கா புயல் #NisargaCyclone

நிசார்கா சூறாவளி
நிசார்கா சூறாவளி ( Windy )

கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மும்பை நகரம், இந்தப் புயலால் கடுமையான மழையைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

அரபிக் கடலில் இரண்டு நாள்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது நிசார்கா சூறாவளியாக உருக்கொண்டுள்ளது.

நிசார்கா சூறாவளி
நிசார்கா சூறாவளி
AP

ஏற்கெனவே, கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாகாராஷ்டிரா மாநிலத்தில், இந்தப் புயலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘1891-ம் ஆண்டுக்குப் பிறகு, மகாராஷ்டிரா மற்றும் மும்பையை எந்த ஜூன் மாத வெப்பமண்டலப் புயலும் தாக்கவில்லை. 1948 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில், இரண்டு வெப்பமண்டலப் புயல்கள் மும்பையை நெருங்கி வந்தன. ஆனால், அவை சூறாவளியாக மாறவில்லை’ என இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வாளர் அக்‌ஷய் தியோரஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி, சுமார் 129 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் மாத வெப்பமண்டலப் புயல் மும்பையில் இன்று கரையைக் கடக்கிறது. வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் மாவட்டம் மற்றும் தெற்கு குஜராத்தின் ஹரிகேஸ்வர் பகுதிகளுக்கு இடையே இன்று புயல் கரையைக் கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக, தேசிய வானிலை ஆய்வு மைய தலைவி சுனிதா தேவி இன்று பேசுகையில், ``நிசார்கா புயல் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிக்குள் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கரையைக் கடக்கும்போது 110 -120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்.

மகராஷ்டிராவின், தெற்கு அலிபேக் பகுதியில் இது கரையைக் கடந்தாலும், ராய்கட், மும்பை, தானே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயலின் தாக்கம் இருக்கும் ” என்றார். புயல் 11.30 மணியளவில் கரையை கடக்கத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

மும்பை
மும்பை

மும்பையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் தயார் நிலையில் உள்ளது. மகாராஷ்டிராவின் 7 மாவட்டங்கள் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது.

ஏற்கெனவே, கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மும்பை நகரம், இந்தப் புயலால் கடுமையான மழையைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஊரடங்கு நகரத்தில் அமலில் இருப்பதால், மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடல் அலையும் ஆக்ரோஷமாக இருக்கும். வழக்கத்தைவிட அலையின் உயரம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு