Published:Updated:

`எங்களை மன்னிச்சிருங்க!’ - ஒடிசாவில் தற்கொலை செய்துகொண்ட தமிழகப் பேராசிரியர்

ஒடிசாவில் வசித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர், தன் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.

 Jaybalan - Malini
Jaybalan - Malini

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயபாலன் (38), மாலினி (35) தம்பதி. இவர்கள், தற்போது ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி (National Institute of Technology) கல்லூரி வளாகத்தின் குடியிருப்பில் வசித்து வந்தனர். ஜெயபாலன் என்.ஐ.டி கல்லூரியில் துணைப் பேராசிரியராகப், பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்குத் திருமணமாகி 9 வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

Odisha Suicide
Odisha Suicide
ANI

இந்நிலையில், கடந்த இரு நாள்களாக ஜெயபாலின் வீடு உள் பக்கமாகப் பூட்டியே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், குடியிருப்பில் உள்ள பாதுகாவலருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அவர் வந்து வீட்டை திறக்க முயன்று, முடியாமல் போகவே காவல்துறையினருக்குத் தெரிவித்துள்ளார். குடியிருப்புக்கு விரைந்த காவலர்கள், ஜெயபாலனின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டினுள், ஜெயபாலனும் அவரது மனைவி மாலினியும் இறந்து கிடந்துள்ளனர். இருவரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் காவல்துறையினர். இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர் என்பது பிரேதப் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

Odisha Suicide
Odisha Suicide
ANI

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக, இருவரும் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு கடிதத்தை எழுதிவைத்துள்ளனர். அதில், ``எங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். அப்பா, அம்மா இருவரும் எங்களை மன்னிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

``வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது, ஜெயபாலன் பாத்ரூமிலும் மாலினி படுக்கை அறையிலும் கிடந்தனர். இறப்பதற்கு முன்னதாக இருவரும் வாந்தி எடுத்துள்ளனர். தங்களின் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என அவர்கள் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. தம்பதி இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, இருவரின் உடலும் சொந்த ஊருக்கு அனுப்பப்படும்” என ரூர்கேலா காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Odisha Suicide
Odisha Suicide
ANI

தடயவியல்துறை, அறிவியல் வல்லுநர்கள் மற்றும் பிற ஆய்வாளர்கள், தற்கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்துள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் இன்று தமிழகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.