Published:Updated:

மும்பையில் `கராச்சி’ பெயரில் பிஸினஸா? - பேக்கரி ஓனரை மிரட்டிய சிவசேனா நிர்வாகி #ViralVideo

ஸ்வீட்ஸ்
ஸ்வீட்ஸ் ( Representational Image )

`கராச்சி ஸ்வீட்ஸ்’ என்று பதிவு செய்யப்பட்ட பெயரை மாற்றுமாறு கடை உரிமையாளரிடம் அறிவுறுத்திய நிதின், 15 நாள்களில் திரும்பி வருவதாகவும் கூறினார்.

மும்பையிலுள்ள `கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் உரிமையாளரிடம், ``கராச்சி என்ற பெயரை நான் வெறுக்கிறேன், நீங்கள் இந்துவாக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் மும்பையில் `கராச்சி’ என்ற பெயரில் வியாபாரம் செய்யக் கூடாது. 15 நாள்களில் திரும்பி வருவேன். பெயரை மாற்றியிருக்க வேண்டும்’’ என்று சிவசேனா கட்சியைச் சேர்ந்த நிதின் நந்த்கோன்கர் எச்சரித்த, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

1966-ம் ஆண்டு, சிவசேனா கட்சியை நிறுவி, அதன் தலைவரானார் பால்தாக்கரே. சிவசேனாவில், பால் தாக்கரே மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைவராக அவருடைய மகன் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். மக்கள் மத்தியில் சிவசேனா கட்சியின் செல்வாக்கு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தாலும், பாகிஸ்தான் போன்ற பிரச்னைகளில் கடுமையான வழியைக் கடைப்பிடித்துவருகிறது சிவசேனா.

கராச்சி ஸ்வீட்ஸ்
கராச்சி ஸ்வீட்ஸ்
ANI

இந்தநிலையில், சிவசேனா தலைவரான நிதின் நந்த்கோன்கர் மும்பையின் பாந்த்ரா மேற்குப் பகுதியிலுள்ள கராச்சி ஸ்வீட்ஸின் ஒரு விற்பனை நிலையத்துக்குச் சென்ரிருக்கிறார். அந்தக் கடையின் உரிமையாளரிடம் பேசிய நிதின், `கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் பெயரை மராத்தியில் மாற்றுமாறு கூறியிருக்கிறார். `கராச்சி’ என்ற பெயரை தான் வெறுப்பதாகவும், காரணம் அது தீவிரவாதிகளின் பகுதி என்றும் நிதின் பேசியிருக்கிறார். இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சியை நிதின் நந்த்கோன்கர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பகிர, தற்போது அந்த வீடியோ வைரலாகியிருக்கிறது.

நிதின் பகிர்ந்திருக்கும் வீடியோவில், கராச்சி ஸ்வீட்ஸ் உரிமையாளரிடம் நிதின், கராச்சி என்ற பெயரை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறார். அதற்கு பதிலளித்த கராச்சி ஸ்வீட்ஸ் உரிமையாளர், தனது குடும்பம் கராச்சியிலிருந்து குடிபெயர்ந்ததாகவும் அதனால்தான் அந்தப் பெயரை வைத்திருப்பதாகவும் நிதினிடம் தெரிவிக்கிறார்.

இருப்பினும், உரிமையாளர் சொல்வதை ஏற்க மறுத்த நிதின், ``நீங்கள் இந்து அல்லது முஸ்லிம் என்பது ஒரு பொருட்டல்ல. மும்பையில் நீங்கள் `கராச்சி' என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது. `கராச்சி' என்ற சொல் எங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது’’ என்கிறார். மேலும், ``கராச்சி என்ற பெயரை நான் வெறுக்கிறேன். ஏனெனில், அது பயங்கரவாதிகளின் இடம். `கராச்சி’ என்ற வார்த்தையுடன் எந்த வியாபாரமும் மும்பையில் இருக்கக் கூடாது" என்கிறார் நிதின்.

அதைத் தொடர்ந்து, `கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற பதிவு செய்யப்பட்ட பெயரை மாற்றுமாறு கடை உரிமையாளரிடம் அறிவுறுத்திய நிதின், 15 நாள்களில் திரும்பி வருவதாகவும் கூறினார். மேலும், கடையின் பெயரை மாற்ற மும்பை மாநகராட்சியில் மேற்கோள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அவருக்கு உதவுவதகாவும் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கடந்த 2009-ம் ஆண்டில், மும்பையின் முலுண்ட் (Mulund) பகுதியிலுள்ள ஒரு கராச்சி ஸ்வீட்ஸ் விற்பனை நிலையம், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் (MNS) எச்சரிக்கைக்குப் பின்னர், அதன் பெயரை மாற்றியது. 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து எம்.என்.எஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது. முன்பு எம்.என்.எஸ்-ல் இருந்த நிதின், குர்லா பகுதியில் டாக்ஸியைச் சூறையாடியதற்காக, 19 பேருடன் சேர்த்து 2018-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரியில், மாதுங்கா காவல் நிலையம் அருகே பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரைத் தாக்கியதற்காக நிதின் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு